வருசநாடு, வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை: வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளம்.. மக்கள் அச்சம்

தேனி: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரண்டாவது நாளாக மழை பெய்துவருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக மூல வைகை ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளான வெள்ளிமலை, உடங்கல், ஓயம்பாறை, வருசநாடு, உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பெய்ய தொடங்கிய மழை, விடிய விடிய கொட்டியது. இதனால் வைகையின் பிறப்பிடமாகவும், வைகை அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாகவும் விளங்கும் மூல வைகை ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.

இருபுற கரைகளையும் மூழ்கி செல்லும் தண்ணீர், வேகமாக வருசநாடு, மயிலாடும்பாறை, கடமலைகுண்டு பகுதிகளை கடந்த நிலையில், இன்று இரவுக்குள் வைகை அணையை சென்றடையும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த வெள்ளப்பெருக்கால் மலைகிராமங்களில் வசிக்கும் மக்கள் ஆற்றை கடந்து செல்லமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 60 புள்ளி ஆறு பூஜ்ஜியம் அடியாக இருக்கிறது. வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயத்திற்காக வினாடிக்கு 2 ஆயிரத்து 90 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Related Stories: