40 நாட்களாக தொடரும் விசாரணை.. அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வாதத்தை முன்வைக்க சுப்பிரமணியன் சுவாமிக்கு அனுமதி மறுப்பு

புதுடெல்லி : அயோத்தி வழக்கில் சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் வாதங்களை வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்ந்தவர்களுக்கு மட்டும் தான் வாதத்திற்கு அனுமதி, சுப்பிரமணியன் சுவாமி உடையது இடைகால மனு எனவே இறுதி வாதம் வைக்க அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அயோத்தி வழக்கு இதுவரை கடந்து வந்த பாதை!!

*உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 2.77 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது. இதனை சன்னி வஃக்பு வாரியம், நிர்மோயி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினர் உரிமை கொண்டாடி வருகின்றனர்.

*இதுதொடர்பான வழக்கில், மேற்கண்ட மூன்று தரப்பினரும், சர்ச்சைக்குரிய நிலத்தை சமமாக பங்கிட்டுக் கொள்ள, கடந்த 2010ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

*ஆனால், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

*இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இதற்கு தீர்வு காணும் வகையில் 3 பேர் கொண்ட சமரசக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

*இதில் மத்தியஸ்தர் குழுவின் சமரசம் தோல்வியில் முடிந்தது. இதனால், அயோத்தி நில வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்பட்டது.

*கடந்த ஆக. 6ம் தேதி முதல், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பாக தினமும் விசாரணை நடைபெற்று வந்தது.

*இன்றுடன் (அக். 16) வாதங்களை முடித்துக் கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்துக்கள் தரப்பிற்கு 45 நிமிடங்களும், முஸ்லீம் தரப்பிற்கு ஒரு மணி நேரமும் ஒதுக்கப்பட்டது.

*அதன்படி, இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு, அயோத்தி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இன்றோடு அனைத்து தரப்பு வாதங்களையும் முடித்துக் கொள்ள தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.

*இதையடுத்து இந்து மகா சாபா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட தலைமை நீதிபதி, இதுவரை தாக்கல் செய்ய மனுக்களே போதும் என்றும் தெரிவித்தார்.

*இதனிடையே  உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட  3 பேர் கொண்ட மத்தியஸ்த குழு, பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் அடங்கிய ஆவணங்களை, அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

*ஓய்வுபெற்ற  நீதிபதி கலிஃபுல்லா, ஸ்ரீஸ்ரீரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம்பெற்ற மத்தியஸ்த குழு அறிக்கையை தாக்கல் செய்தது.

சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் வாதங்களை வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

இந்நிலையில் அயோத்தி வழக்கில் சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் வாதங்களை வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்ந்தவர்களுக்கு மட்டும் தான் வாதத்திற்கு அனுமதி, சுப்பிரமணியன் சுவாமி உடையது இடைகால மனு எனவே இறுதி வாதம் வைக்க அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இடத்திற்கு உரிமைக் கோருவர்களின் மனுக்கள் மீதான விசாரணை மட்டுமே நடைபெறும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார். அடுத்த மாதம் 17ம் தேதியுடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வுபெற உள்ளதால், அதற்கு முன்பாக தீர்ப்பு தேதி வெளியாகி, தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: