புதுடெல்லி: ‘சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது கொடுப்பது பற்றி மத்திய அரசு பரிசீலித்தால், கடவுள்தான் இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும்,’ என காங்கிரஸ் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலையொட்டி, பாஜ.வின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், சுதந்திர போராட்ட தியாகியான இந்துத்துவாவாதி வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்? என பள்ளித் தேர்வில் கேள்வி கேட்கும் நாட்டில் எதுவும் நடக்கலாம். மகாத்மா காந்தி கொலை குறித்து சாவர்க்கரிடம் கிரிமினல் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், அவர் விடுவிக்கப்பட்டார். காந்தி கொலை தொடர்பான கபூர் விசாரணை கமிஷன் அறிக்கையில், சாவர்க்கர் மற்றும் அவரது குழுவினரால் கொலைக்கான சதித்திட்டம் தீட்டப்பட்டதற்கான உண்மைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
