ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சீமானைச் சேர்க்கக் கோரி சிபிஐ அதிகாரியிடம் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டத்துறை சார்பில் புகார்

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சீமானை சேர்க்க கோரி வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரியிடம் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜீவ்காந்தி படுகொலை குறித்து சீமான் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியதாக காங்கிரஸ் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் சீமான் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் டி.ஜி.பி அலுவலகத்திலும், தேர்தல் ஆணையத்திலும் காங்கிரஸ் கட்சி சார்பில் சீமான் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கு சி.பி.ஐ யில் தொடர்ந்து நிலுவையில் உள்ள நிலையில் அந்த வழக்கில் சீமானையும் இணைத்து விசாரணை நடத்த கோரி சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் விசாரணை அதிகாரி புனிதமணியிடம் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் சட்டக்குழு இணை தலைவர் நவாஸ் தெரிவித்ததாவது, ராஜீவ்காந்தி கொலையை நாங்கள் தாம் செய்தோம் என்று சீமான் ஒப்பு கொண்டதாகவும், அவர் பேச்சினுடைய சி.டி-யையும், தங்களுடைய புகார் மனுவையும் அளித்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இவரையும் இணைத்து இவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து வழக்கு 302 மற்றும் தேசத்துரோக வழக்குகள் இவர் மீது பதியப்பட்டு, உடனடியாக கைது செய்யப்பட்டு சிபிஐ அதிகாரிகள் விசாரணை தொடங்க வேண்டும் என்று எழுத்து மூலமாகவும், சி.டி மூலமாகவும் தங்களது புகாரினை பசுமைவழிச் சாலையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அளித்து வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Stories: