அரசு பங்களாவில் தங்கியிருக்க பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு அனுமதி: பாதுகாப்பு கருதி மத்திய அரசு நடவடிக்கை

டெல்லி: அரசு பங்களாவில் தங்கியிருக்க பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்களுக்கு மத்திய அரசு டெல்லியில்  அரசு பங்களா ஒதுக்கீடு செய்து கொடுக்கப்படுகிறது. எம்.பி.யாக இருக்கும் காலம் முழுவதும் அவர்கள் அந்த அரசு பங்களாவில் தங்கி இருந்து பணியாற்றலாம். எம்.பி. பதவிக்காலம் நிறைவு பெற்றதும் அரசு பங்களாவில் இருந்து  வெளியேறிவிட வேண்டும். ஆனால், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எம்.பி.யாக இருந்தவர்களில் 35 பேர் இன்னமும் அரசு பங்களாவை காலி செய்யாமல் உள்ளனர். இதுதொடர்பாக மத்திய அரசு உத்தரவிட்டும் பல முன்னாள் எம்.பி.க்கள் அரசு  பங்களாவை விட்டு வெளியேறவில்லை.

இதற்கிடையே, முன்னாள் எம்.பி.க்களில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி இருவரும் முக்கியமானவர்கள். அவர்கள் இருவரும் டெல்லி லுட்யன்ஸ் பகுதியில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வருகிறார்கள்.  பிரிதிவி சாலையில் உள்ள அரசு பங்களாவில் அத்வானி கடந்த 1970-ம் ஆண்டு முதல் தங்கி இருக்கிறார். 91 வயதான நிலையில் அவர் கடந்த எம்.பி. தேர்தலில் போட்டியிடவில்லை. அதுபோல ரைசினா சாலையில் உள்ள அரசு பங்களாவில்  நீண்ட ஆண்டுகளாக தங்கி இருக்கும் முரளி மனோகர் ஜோஷியும் 85 வயது காரணமாக எம்.பி. தேர்தலில் போட்டியிடவில்லை. என்றாலும் அவர்கள் இருவரையும் அரசு பங்களாவில் வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி இருவரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்கள் அரசு பங்களாவில் தொடர்ந்து வசிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கிடையே, டெல்லி நார்த் அவன்யூ சாலையில் உள்ள  காவல் நிலையத்திற்கு அருகே பழைய வீடுகளுக்கு பதிலான புத்தம் புதிய 36 வீடுகள்  கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய 36 வீடுகளை கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 17-வது நாடாளுமன்றத்திற்கு தேர்வான  எம்பிக்களில் சுமார் 260 பேர் புதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: