பி.எம்.சி. வங்கியில் 4355 கோடி மோசடி 2வது திருமணம் செய்து மனைவிக்கு 9 வீடு வாங்கி தந்த வங்கி மாஜி இயக்குநர்

* சொந்த பி.ஏ.வை மணக்க முஸ்லிம் மதத்திற்கும் மாறினார்

மும்பை: திவாலான பி.எம்.சி.வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் தனது குடும்பத்திற்கு தெரியாமல் மதம் மாறி தனது பி.ஏ.வை இரண்டாவது திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. மேலும், இரண்டாவது மனைவிக்கு 9 வீடுகளை வாங்கி கொடுத்துள்ளார். மும்பை சயான் கோலிவாடாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் ரூ.4355 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது. இதனால் வங்கியின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி முடக்கியுள்ளது. வங்கியில் பணம் போட்டவர்கள் தினமும் போராடி வருகின்றனர். சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மும்பை வந்தபோது அவரையும் முற்றுகையிட்டனர். இந்த வங்கியில் ரூ.2500 கோடி அளவுக்கு எச்.டி.ஐ.எல். நிறுவனம் கடன் வாங்கிவிட்டு திரும்ப கொடுக்கவில்லை. இந்த கடன் திரும்ப வராததால்தான் வங்கியின் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.

இது தொடர்பான வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஜாய் தாமஸ், எச்.டி.ஐ.எல். நிறுவன உரிமையாளர் ராகேஷ் வாத்வான், சரங் மற்றும் வங்கியின் முன்னாள் தலைவர் வர்யம் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஜாய் தாமஸ் வங்கியில் தனக்கு பி.ஏ.வாக இருந்த பெண் உதவியாளருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்தது. ஏற்கனவே மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கும் நிலையில் முஸ்லிம் பெண் உதவியாளருடன் தொடர்பு ஏற்பட்டதால் 2005ம் ஆண்டு ஜாய் தாமஸ் தனது பெயரை ஜுனைத் என்று மாற்றிக்கொண்டார். ஆனால் ஆவணங்கள் அனைத்திலும் ஜாய் தாமஸ் என்ற பெயரையே பயன்படுத்தி வந்தார். அவரது பி.ஏ. 2005ம் ஆண்டு தான் திருமணம் செய்து கொண்டு கொண்டு துபாய் செல்லப்போவதாக கூறி வேலையை விட்டார். ஆனால் அவர் சட்டவிரோதமாக ஜாய் தாமசை திருமணம் செய்து கொண்டு புனேயில் வசித்து வந்தார். ஜாய் தாமஸ் அடிக்கடி மும்பைக்கும் புனேவிற்கும் சென்று வந்துள்ளார். அதோடு புனேயில் இருக்கும் தனது இரண்டாவது மனைவிக்கு அங்கேயே 9 வீடுகள் வாங்கிக் கொடுத்துள்ளார். அவற்றின் மதிப்பு ரூ.4 கோடியாகும். அவை அனைத்தும் இரண்டாவது மனைவி பெயரில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

அவருக்கு வீடுகள் வாங்க எப்படி பணம் கிடைத்தது என்பது குறித்து விசாரித்து வருவதாகவும், வங்கி பணத்தில் வாங்கப்பட்டு இருப்பது தெரிய வந்தால் அவற்றை பறிமுதல் செய்வோம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மும்பை மற்றும் தானேயில் ஜாய் தாமசிற்கு சொந்தமான 4 வீடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜாய் தாமஸ் மற்றும் அவரது இரண்டாவது மனைவி சேர்ந்து ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்துள்ளனர். அக்குழந்தைக்கு 11 வயதாகிறது. அதோடு அவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும் இருக்கிறான். 2வது மனைவி சாக்லேட் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். ஜாய் தாமசிற்கு 2வது மனைவி இருப்பதை அறிந்த முதல் மனைவி விவாகரத்து கேட்டுள்ளார்.

Related Stories: