கேமராமேன்களுடன் குப்பை அள்ளிய ஒரே இந்திய பிரதமர் மோடி: பிருந்தா காரத் தாக்கு

சென்னை: உலகத்திலேயே கேமராமேன்களுடன் ‘வாக்கிங்’ சென்று குப்பைகளை அள்ளிய ஒரே தலைவர் மோடி’ என சிபிஐ(எம்) கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறினார். திருவள்ளூரில் சிபிஐ(எம்) கட்சி சார்பில், ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் அகில இந்திய மத்திய குழுக் கூட்டம் மற்றும் மாநில சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடந்தது. கூட்டத்தில், சிபிஐ(எம்) கட்சியின் அரசியல் தலைமைக் குழு  உறுப்பினர் பிருந்தா காரத் பங்கேற்று சிறப்புரையாற்றினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘2019 நாடாளுமன்ற தேர்தலில் முழு பெரும்பான்மையுடன் பாஜ அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இந்த ஒரு ஆண்டில், இந்தியாவில் 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை  28 சதவீதத்தை தாண்டியுள்ளது.

அதேபோல் உணவு பாதுகாப்பும் இல்லை. கிராமப்புற பகுதிகளில் தனிநபர் மாத வருமானம் ரூ.1,200 ஆகவும், நகர பகுதிகளில் ரூ.2,900 ஆகவும் வருவாய் உள்ள நிலையில் பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு எட்ட முடியும். எந்த ஒரு  பொருளையும் வாங்கும் சக்தியை மக்கள் இழந்துள்ளனர். பணப்புழக்கம் அடியோடு குறைந்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஆகியோர், மாமல்லபுரத்தில் நடைபெற்ற சந்திப்பு, நாட்டிற்கு என்ன தேவை என்பதை அறிய முடியாத நிலையில் நடைபெற்ற சந்திப்பு ஆகும். உலகத்திலேயே ஊடக கேமராமேன்களை அழைத்துக்கொண்டு  ‘வாக்கிங்’ சென்று குப்பைகளை அள்ளிய ஒரே தலைவர் மோடி தான். மத்திய பாஜ அரசின் அடிமையாக தமிழக அதிமுக அரசு உள்ளது. மத்திய அரசு ‘உட்கார்’ என்றால் உட்காருவதும், ‘எழுந்திரு’ என்றால் நிற்பதுமாக அதிமுக அரசு உள்ளது’ என்றார்.

Related Stories: