பிளாஸ்டிக் தடையை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பிளாஸ்டிக் தடையை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:சீன அதிபருடன் பேச்சு நடத்துவதற்காக கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த பிரதமர் நரேந்திர மோடி, விடுதியின் பின்புறத்தில் உள்ள கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பை கிடந்ததை கண்டு அவற்றை அப்புறப்படுத்தியுள்ளார்.  பிரதமர் தூய்மைப்பணி மேற்கொண்ட இடத்தில் மட்டும் தான் என்றில்லாமல் தமிழகம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றன. ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்  பைகளுக்கு மாற்றாக எளிதில் மக்கக்கூடிய பயோ பைகள், காகிதப் பைகள், மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பைகள் போன்றவை பயன்பாட்டுக்கு வந்துள்ள போதிலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக்  பொருட்கள் தாராளமாக புழங்குவதை பார்க்க முடிகிறது.

பிளாஸ்டிக் தடை நடைமுறைக்கு வந்த போது அதை செயல்படுத்துவதில் காட்டப்பட்ட ஆர்வமும், தீவிரமும் காலப்போக்கில் குறைந்து விட்டது தான் இதற்குக் காரணம். பிளாஸ்டிக் பொருட்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் நூறு பொருட்களுடன் நூற்றி ஒன்றாவது பொருள் என்ற அலட்சியமான எண்ணம் மக்களின் மனதிலிருந்து அகற்றப்பட வேண்டும். பிளாஸ்டிக் இல்லாத உலகம் தான் உன்னத உலகம்  என்பதை உணர வேண்டும். அத்தகைய உலகத்தை ஏற்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை சட்டத்தை மிகத் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.

Related Stories: