கெத்தையில் மீண்டும் அட்டகாசம் மின் ஊழியர் குடியிருப்புக்குள் புகுந்த 5 காட்டு யானைகள்: அரசு பஸ்-வாகனங்களையும் வழிமறித்து நிறுத்தின

மஞ்சூர்: கெத்தையில் குடியிருப்பு பகுதிகளில் மீண்டும் காட்டு யானைகள் நடமாடுவதால் மின்வாரிய ஊழியர்கள் பீதி அடைந்துள்ளனர்.  நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள கெத்தை பகுதியில் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் மின்வாரிய பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த ஆய்வு மாளிகை கதவை உடைத்து பொருட்களை காட்டு யானைகள் சூறையாடின. இதைத்தொடர்ந்து மின்வாரிய ஊழியர் ஒருவரின் வீட்டு கதவையும்  உடைத்தன. அதிர்ஷ்டவசமாக வீட்டுக்குள் இருந்த ஊழியர் யானைகளின் பிடியில் சிக்காமல் உயிர் தப்பினார். இதைத்தொடர்ந்து வனத்துறையினர் கெத்தை பகுதியில் முகாமிட்டு காட்டு யானைகளை எல்.ஜி.பி. வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர். இதனால் கடந்த சில தினங்களாக காட்டு யானைகளின் தொல்லையில்லாமல் மின்வாரிய ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மீண்டும் 5 காட்டு யானைகள் கெத்தை மின்வாரிய குடியிருப்புக்குள் புகுந்தது.  இதனால் பீதி அடைந்த ஊழியர்களின் குடும்பத்தினர் கதவுகளை மூடி தாழிட்டு வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்தனர். சுமார் ஒரு மணி நேரம் குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டு யானைகள் அங்கிருந்து அகன்று சாலையில் இறங்கி ரோட்டை மறித்தபடி நின்றன. அப்போது கோவை மற்றும் மஞ்சூர் பகுதிகளில் இருந்து சென்ற அரசு பஸ் மற்றும் சுற்றுலா வாகனங்கள் சாலையோரத்தில் ஓரங்கட்டி நிறுத்தப்பட்டன. சுமார் 30 நிமிட நேரத்திற்கு பின் காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன. இதன்பிறகே வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. கெத்தை பகுதியில் நடமாடும் காட்டு யானைகளை அங்கிருந்து விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரியத்தினர் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Related Stories: