அனைத்து தகவலும் வெப்சைட்டில் வெளியிடப்படுவதால் ஆர்டிஐ விண்ணப்ப தேவையை மத்திய அரசு குறைத்து விட்டது: சிஐசி கூட்டத்தில் அமித்ஷா பேச்சு

புதுடெல்லி: ‘‘அனைத்து தகவல்களையும் பொதுவில் வெளியிடுவதுதான் மோடி அரசின் நோக்கம். அதனால் தகவல் உரிமை சட்டத்தில் விண்ணப்பம் செய்யும் தேவையை மத்திய அரசு குறைத்துள்ளது,’’ என மத்திய தகவல் ஆணைய கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். மத்திய தகவல் ஆணையத்தின் 14வது ஆண்டு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் கலந்து கொண்டு பேசியதாவது: கடந்த 14 ஆண்டு காலத்தில், தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) ெகாண்டு வந்ததின் நோக்கத்தை, நாடு வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. ஆர்டிஐ சட்டத்தின் அடிப்படை நோக்கமே, மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதுதான். அரசியல் சாசனப்படி அரசு நிர்வாகம் நடக்கிறது. இதன் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்போது, அவர்களின் பங்களிப்பும் தானாக அதிகரித்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்கிறது. அவநம்பிக்கை ஏற்பட்டால், மக்களின் பங்களிப்பும் பின்னுக்கு சென்று விடும்.

நிர்வாக பணிகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும் வகையில் மத்திய அரசு மாற்றியுள்ளது. ஆர்டிஐ மனுக்கள் மூலம் தகவல் அறியும் தேவை இல்லாத வகையில், அரசு நிர்வாகம் செயல்பட வேண்டும். அதுபோன்ற நிர்வாக முறையை அறிமுகப்படுத்ததான் நாங்கள் விரும்புகிறோம். அதிக எண்ணிக்கையிலான ஆர்டிஐ மனுக்கள், அரசின் வெற்றியை வெளிக்காட்டுவதில்லை. ஆர்டிஐ மனுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால்தான், அரசுப் பணி திருப்தியாக உள்ளது என அர்த்தம். பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய ‘டேஸ்போர்டு’ தகவல் அறியும் முறை மூலம், ஆர்டிஐ மனு போடமலேயே, மத்திய அரசின் அனைத்து திட்ட பணிகள் குறித்த முழு தகவல்களையும் ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஜன்தன் கணக்கு, ஆதார் என பல நடவடிக்கைகளுக்கு, அரசு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. ஒரு அணை கட்டுப்பட்டுள்ளதா இல்லையா, அங்குள்ள தண்ணீர் நிலவரம் ஆகியவற்றை அறிய ஜியோ-டேக்கிங் மூலம் செயற்கைகோள் படங்களை பயன்படுத்தி தகவல் அறிகிறோம். நீர்பாசன வசதி பற்றி தகவல்களை டிரோன்களை பயன்படுத்தி அறிகிறோம். கேதர்நாத்தில் தற்போது சாலை அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றை நேரில் சென்று ஆய்வு செய்ய தேவையில்லை. டிரோன்கள் மூலம் படம்பிடிக்கும் தகவல்களை ஆன்லைன் மூலமாகவே அறிந்து கொள்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: