திண்டுக்கல் மாவட்டத்தில் வீட்டில் இருந்தபடியே மாதந்தோறும் சம்பளம் பெற்றுவருவதாக பெண் அரசு அதிகாரி மீது புகார்

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு விரைவு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் பணிபுரிந்துவரும் பெண் அதிகாரி ஒருவர் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக அலுவலகத்துக்கு செல்லாமல், வீட்டில் இருந்தபடியே மாதந்தோறும் சம்பளம் பெற்றுவருவதாக புகார் எழுந்துள்ளது. திண்டுக்கல் மண்டல அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் அதிகாரி பொறுப்பில் 57 வயதான நிர்மலா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இன்னும் சில மாதங்களில் ஓய்வுபெற உள்ள நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக மருத்துவ விடுப்பில் வீட்டில் இருந்தபடியே அரசின் சம்பளத்தை முழுவதுமாக பெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. கால் விரலில் அறுவைச் சிகிச்சை என்று ஆரம்பத்தில் விடுப்பு எடுத்த நிர்மலா அதன்பின் பணிக்காக அலுவலகம் செல்வதை தவிர்த்து விட்டு மாதத்தின் கடைசி நாள் சென்று மொத்தமாக வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு ஊதியம் பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

இது குறித்து நிர்மலாவை தொடர்பு கொண்டு பேசிய போது, தான் அலுவலகத்திற்கு செல்வதில்லை என்பதை ஒப்புக் கொண்டார். அதே நேரத்தில், பெயரை வெளியில் சொல்லவே அஞ்சிய நிர்மலாவின் கணவர் தனது மனைவி வீட்டில் இருந்தே கோப்புகளைப் பார்த்து கையெழுத்திடுவதாக சமாளித்ததோடு கடுமையான மிரட்டலும் விடுத்தார். நிர்மலாவின் உறவினர் அரசியலில் செல்வாக்கு மிக்கவர் என்பதால் அங்குள்ள உயர் அதிகாரிகளும் இது குறித்து கண்டு கொள்வதில்லை என்று கூறப்படுகின்றது.

ஏற்கனவே போக்குவரத்துத் துறை கடுமையான கடனில் தத்தளிக்கும் நிலையில் நிர்மலாவை போன்ற பணிக்கு வராத ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை பணிநீக்கம் செய்து புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே அரசு பணிக்காக காத்திருக்கும் படித்த இளைஞர்களின் ஆதங்கமாக உள்ளது.

Related Stories: