சீன அதிபர் ஜின்பிங் பயண நேரத்தில் மாற்றம்: மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் ஆலோசனை என தகவல்

சென்னை: பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இன்றைய நிகழ்ச்சி நிறைவடைந்தது. நாளையும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர்.  இந்த சந்திப்பின்போது,  பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இந்திய - சீன எல்லை பிரச்னை, இரு நாட்டு வர்த்தம், தீவிரவாதம் ஒழிப்பு  உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கிறார்கள். இதையொட்டி சென்னை, மாமல்லபுரம் பகுதிகள் முழுவதும் பாதுகாப்பு வளையத்தில்  வைக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் புராதான சிறபங்களை பார்வையிட்ட இரு தலைவர்கள்:

தமிழகம் வந்த இரு தலைவர்களும் மாலை 5 மணியளவில் மாமல்லபுரம் வருகை தந்தனர். முதலில் மாமல்லபுரம் பிரதமர் நரேந்திர மோடி தமிழக  பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, தோளில் துண்டு அணிந்து சீன அதிபர் ஜின்பிங்கை வரவேற்றார். தொடர்ந்து, இரு நாட்டு தலைவர்களும் சுற்றி  பார்த்தபடி சந்தித்து பேசினர். முதலில் அர்ஜூனன் தபசு என்ற இடத்தில் பார்வையிட்டனர். அர்ஜூனன் தபசு பெருமைகள் குறித்து சீன அதிபர் ஜி  ஜின்பிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்தார். மேலும், இருவரும் அர்ஜூனன் தபசு முன்புறம் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

தொடர்ச்சியாக, வெண்ணெய் உருண்டை கல்லிலை பார்வையிட்டனர். அப்போது, வெண்ணெய் உருண்டை கல்லின் தனித்துவத்தை பிரதமர் மோடி சீன  அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எடுத்துரைத்தார். மேலும், வெண்ணெய் உருண்டை கல் முன்புறம் இருவரும் கை உயர்த்தி புகைப்படம் எடுத்தனர். தொடர்ந்து,  ஐந்து ரதங்களின் சிற்பங்களை கண்டு களித்ததுடன், அங்கு அமர்ந்து இருவரும் சிற்பங்கள் குறித்து பேசினர். அப்போது, சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு  இளநீர் வழங்கி பிரதமர் மோடி உபசரித்தார்.

நிறைவாக மாமல்லபுரத்தின் பிரசித்தி பெற்ற கடற்கரை கோவிலுக்கு சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி கோவிலின்  சிற்பங்களை பார்வையிட்டனர். கோயிலின் உன்னத சிற்பங்கள் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி எடுத்துரைத்தார். இரு தலைவர்கள்  வருகை அடுத்து கடற்கரை கோயில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

மேலும், அங்கு பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர், தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவல், உயர் அதிகார்களை சீன  அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அறிமுகம் செய்து வைத்தார். அதைபோல், சீன அதிகாரிகளை பிரதமர் மோடிக்கு அதிபர் ஜி ஜின்பிங் அறிமுகம் செய்து  வைத்தார்.

சீன அதிபர் ஜின்பிங்கிற்கு நினைவு பரிசு:

பரதநாட்டியம், கதகளி, ராமாயண காவியம் காட்சிகள் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை, கண்டு பிரதமர்  மோடி கையசைத்து வியந்து ரசித்தார். அதனைபோன்று சீன அதிபரும் வியந்து கண்டு ரசித்தார். மேலும், கலை நிகழ்ச்சிகள் குறித்து அவ்வப்போது, சீன  அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி எடுத்துரைத்தார். கலை நிகழ்ச்சி முடிவில் குழுவினருடன் இருதலைவர்களும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

தொடர்ச்சியாக, மாமல்லபுரத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு, பிரதமர் மோடி நினைவு பரிசு வழங்கினார். நாச்சியார் கோவில் அன்னம் விளக்கு,  தஞ்சாவூர் நடனமாடும் சரஸ்வதி ஓவியத்தை ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி வழங்கினார்.

சீன அதிபர் ஜின்பிங் பயணத்தில் மாற்றம்:

மாமல்லபுரத்தில் இருந்து நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு சீன அதிபர் ஜின்பிங், 9 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஓட்டலுக்கு செல்ல  இருந்த நிலையில், இன்னும் மாமல்லபுரத்தில் இருந்து சீன அதிபர் ஜின்பிங் புறப்படவில்லை. இதனால் பயண நேரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக  தெரிகிறது. மேலும்., கடற்கரை கோவில் வளாகத்தில் சீன அதிபர் ஜின்பிங்குடன் பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர், தேசிய  பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவல் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: