கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக, மத்திய அரசு அறிவிக்க வேண்டும்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி

சிவகங்கை: கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியை பார்வையிட்டு அங்கு நடைபெற்று வரும் ஆய்வு பணிகள் குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அவருடன் மதுரை எம்.பி சோ.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராசன் ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம்  பேசிய வைகோ கீழடியில் கண்டெடுக்கப்பட்ட 16 ஆயிரம் பொருட்களை கொண்ட ஆய்வின் மூலமாக எழுத்தறிவு பெற்ற மக்கள் வாழ்ந்துள்ளதை அறிய முடிகிறது என்று கூறினார். கீழடி  பகுதியில் சர்வதேச தளத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், உலகின் முதல் நாகரிகம் தமிழர் நாகரிகம் மட்டுமே என்பதை உலக மக்கள் விரைவில் ஏற்று கொள்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் பழங்கால மனிதர்கள் தங்கும் இடமாக பயன்படுத்தும் கல்திட்டை கண்டறியப்பட்டுள்ளது.

பாறைகளின் மறைவில் மழை, வெயில் போன்றவற்றிற்கான கல்திட்டை அமைத்து அதில் பண்டைய கால மனிதர்கள் வசிப்பிடமாக பயன்படுத்தியிருக்க கூடும் என்றும் கருதப்படுகிறது. தமிழகத்தில் பல இடங்களில் கல் திட்டைகள் கண்டறியப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கீழடியில் 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் வாழ்ந்த வாழ்விடம் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியில் 5ம் கட்ட அகழாய்வு 4 மாதங்கள் நடந்த பின் முடிவடைந்துள்ளது. 52 குழிகள் தோண்டப்பட்டு நடந்த அகழாய்வில் 700க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் கட்டிட தொழில்நுட்பம், வேளாண்மை, நெசவு உள்ளிட்டவற்றில் தமிழர்கள் மேம்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. எனவே கீழடியில் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: