வரலாற்று சிறப்பம்சங்களை கொண்டுள்ளதால் சீன அதிபரை சந்திக்க மாமல்லபுரத்தை தேர்வு செய்ததே பிரதமர் மோடி தான்: வெளியுறவுத்துறை தகவல்

புதுடெல்லி: வரலாற்று சிறப்பம்சங்களை கொண்டுள்ளதால் சீன அதிபரை சந்திக்க மாமல்லபுரத்தை தேர்வு செய்ததே பிரதமர் மோடி தான் வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இன்றும், நாளையும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பின்போது, பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இந்திய - சீன எல்லை பிரச்னை, இரு நாட்டு வர்த்தம், தீவிரவாதம் ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கிறார்கள். இதையொட்டி சென்னை, மாமல்லபுரம் பகுதிகள் முழுவதும் பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவை ஒரு புறம் இருக்க, இரு பெரும் தலைவர்கள் சந்திக்க மாமல்லபுரத்தை யார் தேர்வு செய்தது என்ற கேள்வி இருந்து வந்தது.

ஏனெனில், இந்தியாவில் எத்தனையோ இடங்கள் இருக்க மாமல்லபுரத்தை ஏன் இந்த சந்திப்புக்குத் தேர்ந்தெடுத்தனர் என்று பலரும் யோசித்துக் கொண்டிருந்தனர். அப்போது, மாமல்லபுரத்தை தேர்வு செய்ததே சீனா தான் என்றும், மாமல்லபபுரத்தில் சந்திப்பை மேற்கொள்ளலாம் என்று இந்தியாவிடம் சீனாவே தெரிவித்ததாகவும் தகவல்கள் காட்டுத்தீ போல் பரவின. இந்த நிலையில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திக்க மாமல்லபுரத்தை தேர்வு செய்ததே பிரதமர் மோடி தான் என வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி அல்லது, குஜராத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவை அல்லாது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளை முன்னிலைப்படுத்தம் வகையிலான இடத்தை பிரதமர் மோடி எதிர்பார்த்தாராம்.

இதன் காரணமாகவே, மாமல்லபுரத்தில் இந்த சந்திப்பை நடத்த சீன அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பம்சம் மற்றும் இணைப்புகளை கொண்டுள்ளதால், சீன அதிகாரிகளும் மாமல்லபுரத்தை உடனே அங்கீகரித்துள்ளனர். இதையடுத்து, முறைசாரா உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, சீன அதிகாரிகள் நகரத்தின் பாதுகாப்பு மற்றும் தளவாட அம்சங்களை சரிபார்க்க மாமல்லபுரத்திற்கு பல உளவு பயணங்களை மேற்கொண்டனர் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து 56 கி.மீ தூரத்தில் உள்ள இந்த துறைமுக நகரம் பண்டைய காலங்களில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை கொண்டிருந்தது. ஏழாம் நூற்றாண்டில் பல்லவ வம்சத்திற்கும் சீன சாம்ராஜ்யத்திற்கும் இடையிலான தொடர்புகள் நிறுவப்பட்ட மாமல்லபுரம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான நுழைவாயிலாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: