ம.பி.யில் திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழிக்க நூதன திட்டம்: கழிப்பறையில் மணமகன் நிற்கும் படத்தை அனுப்பும் பெண்ணுக்கு ரூ.51,000 நிதி

போபால்: மத்திய பிரதேசங்களில் திறந்தவெளி கழிப்பிடங்களை முழுவதும் ஒழிக்கும் வகையில் கழிப்பறையில் மணமகன் நிற்பது போன்று செல்பி படம் எடுத்து அனுப்பும் மணப்பெண்ணுக்கு 51 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படுகிறது. திறந்தவெளியை கழிப்பிடமாக சிலர் பயன்படுத்துவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே ஏழை எளிய மக்களிடையே நிலவும் இந்த பழக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய பிரதேச அரசு புதிய திட்டத்தை அறிவித்தது. இதை தொடர்ந்து வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் குடும்பத்தை சேர்ந்த இளம்பெண் திருமணத்திற்காக அரசிடம் இருந்து நிதியுதவி பெற வேண்டும் எனில், வருங்கால கணவரின் இல்லத்தில் கழிப்பறை இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

அப்படி உறுதி செய்வோருக்கு வறுமை கோட்டின்கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்த 2 பெண்ணுக்கு மட்டும் திருமண நிதியுதவியாக 28 ஆயிரம் ரூபாய் முதலில் அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்ததும் அந்த நிதியுதவி 51 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. இதனால் மணப்பெண்ணிடம் இருந்து நிதியுதவி கோரி வரும் மனுக்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. ஆதலால் வீடுகள் தோறும் சென்று சோதனை நடத்தி இதனை அதிகாரிகளால் உறுதி செய்ய முடியவில்லை. எனவே கழிப்பறையில் மணமகன் நிற்பது போன்று செல்பி படம் எடுத்து அனுப்பும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். இதை தொடர்ந்து எதிர்கால கணவர் கழிப்பறையில் நிற்பது போன்ற புகைப்படத்தை எடுத்து மணப்பெண்கள் அனுப்பி வருகின்றனர்.

Related Stories: