உடலும் உள்ளமும் நலம்தானா...?

*உலக மனநல தினம்

Advertising
Advertising

உடல் நலனை விட மனநலன் மிகவும் முக்கியமானது. இரண்டிற்குமே மருத்துவ ரீதியில் சரி செய்யலாம் என்றாலும், அன்றாடம் பிரச்னைகளால் ஏற்படும் மன அழுத்தமே பலருக்கு தற்கொலை உள்ளிட்ட பல தவறான எண்ணங்களை ஏற்படுத்தி விடுகிறது. உடலில் ஏற்படும் நோய்களை கூட மருத்துவத்தில் குணப்படுத்தலாம். அல்லது நோயின் வீரியத்தை குறைக்கலாம். ஆனால், மனநல பிரச்னைகள் நாளடைவில் நமது அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும். அதற்கு தீர்வாக உருவானதே உலக மனநல தினம். இது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 1992ம் ஆண்டு உலக மனநல கூட்டமைப்பு இந்த தினத்தை அறிமுகப்படுத்தியது.

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி உலக அளவில் 45 கோடி மக்கள் மனநல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, குழந்தை பருவம் முதல் முதிய பருவம் வரை இதன் பாதிப்பில் இருந்து யாருமே தப்பிக்க முடியாது. அதாவது, 14 வயது முதல் தொடங்கி விடுகிறது. 15-30 வயதிற்குட்பட்டோரில் பெரும்பாலானோர் மன அழுத்தத்தால் அதிகளவு தற்கொலை முடிவை மேற்கொள்வதாக கூறப்படுகிறது. உலக நாடுகளின் பெரியண்ணன் என அழைக்கப்படும் அமெரிக்காவில்தான் அதிக மன அழுத்தம் கொண்டவர்கள் இருக்கின்றனராம்.

தொடர்ந்து கொலம்பியா, உக்ரைன், நெதர்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன. ஜப்பான், நைஜீரியா, சீனா ஆகிய நாடுகளில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோர் குறைந்த அளவிலேயே உள்ளனர். குறிப்பாக, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், வடக்கு ஆப்ரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் போன்றவற்றில் மன அழுத்த பாதிப்பு அதிகம் உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான மன அழுத்தங்களுக்கு பொருளாதார சிக்கல், காதல் தோல்வி, நெருக்கமான உறவுகளை பிரிவது அல்லது அவர்களின் இறப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிப்பது, தீரா உடல் நோய், போதைப்பொருட்களின் பயன்பாடு இப்படி பல விஷயங்கள் மன அழுத்தத்திற்கு முக்கிய காரணிகளாக அமைகின்றன. உடலின் ரசாயன குறைபாட்டால் நேரும் மன அழுத்தத்தைத் தீவிர மன அழுத்தம் என்றும், வாழ்வின் நிகழ்வுகளால் ஏற்படும் மன அழுத்தத்தை மிதமான மன அழுத்தம் என்றும் குறிப்பிடுகின்றனர்.

மன அழுத்தத்தை உரிய மருத்துவ சிகிச்சை மூலம் சரிப்படுத்தலாம். ஆனாலும், மன உறுதியை நாம்தான் கடைப்பிடிக்க வேண்டும். ஆண்டுக்கு ஆண்டு மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த 2015ம் ஆண்டுக்கு பிறகு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் புதிதாக எந்த அழுத்தம் குறைக்கும் மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், மன அழுத்தத்தைக் குணப்படுத்த மருந்துகளைத் தாண்டி சிந்திக்கும் நிலைக்கு மனநல மருத்துவர்கள் தள்ளப்படுகின்றனர். மரபணு மாறுபாடுகள் குறித்த சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்புகள், மன அழுத்தத்துக்கான புதிய தலைமுறை சிகிச்சைகள் குறித்து நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.

என்ன செய்யலாம் :  மனநலம் பாதித்தவர்களை ஒரே இடத்தில் வைக்கக்கூடாது. அவர்களை மகிழ்ச்சிக்குரிய மனநிலைக்கு மாற்றம் செய்யும் இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். தகுந்த ஆறுதல் வார்த்தைகளை கூற வேண்டும். அவர்கள் பாதிக்கப்பட்ட விஷயங்களை மீண்டும் கிளறக்கூடாது. கூடுமானவரை அவர்களை தனிமைப்படுத்தாமல் இருப்பதே சிறந்தது.

Related Stories: