பிரதமர் - சீன அதிபரை வரவேற்று அறிக்கை விடுத்த ஸ்டாலின், வைகோவிற்கு நன்றி: பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: இரு நாடுகளின் பேச்சுவார்த்தைக்காக தமிழகம் வரும் பிரதமர் மோடி, சீன அதிபரை வரவேற்று திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் அறிக்கை வெளியிட்டதற்கு நன்றி என்று முன்னாள்  மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் வரும் 11, 12, 13ம் தேதி மாமல்லபுரம் வருகை தர உள்ளனர். இதனையொட்டி, அவர்களை மாமல்லபுரம் நகரம் சார்பில்,  வரவேற்கும் விதமாக பேரணி நடந்தது. மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகில் புறப்பட்ட பேரணியை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், 4 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 3  ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இப்பேரணியில் கலந்துக் கொண்டனர்.

மாணவர்கள், பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் படங்களை கையில் ஏந்திய பதாகைகளுடன் ஊர்வலமாக சென்றனர். பின்னர் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார். அப்போது, ‘இந்திய பிரதமர் மோடி  மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகை என்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக மாமல்லபுரம் மாறியுள்ளது. இரு தலைவர்களை வரவேற்கும் வகையில் அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்  செயலாளர் வைகோ ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு என்பது கட்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட விஷயம். இது தமிழனுக்கு தலை நிமிர்வை ஏற்படுத்தும் விஷயம் என்றார்.

Related Stories: