230 மில்லியன் டாலர் நிதிப்பற்றாக்குறையுடன் இயங்கி வரும் ஐ.நா...: இம்மாத இறுதிக்குள் மீதமுள்ள நிதியும் தீர்ந்துவிடும் என தகவல்!

நியூயார்க்: 230 மில்லியன் டாலர் நிதிப்பற்றாக்குறையுடன் இயங்கி வரும் ஐ.நா.வில், இம்மாத இறுதிக்குள் மீதமுள்ள நிதியும் தீர்ந்துவிடும் என்ற அபாயம் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ஐ.நா.வின்., பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெரெஸ், ஐக்கிய நாடுகள் சபை தற்போது 230 மில்லியன் டாலர் பற்றாக்குறையுடன் இயங்கி வருகிறது. மேலும் அக்டோபர் மாத இறுதிக்குள் சபையை நடத்த பணம் இல்லாமல் போகக்கூடும். ஐ.நா. செயலகத்தில் உள்ள 37,000 ஊழியர்களுக்காக சம்பளம் மற்றும் உரிமைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஐ.நாவுக்கு வழங்க வேண்டிய நிதிகளை உறுப்பு நாடுகள் முறையாக செலுத்தவில்லை. அதாவது, 2019ம் ஆண்டில் எங்கள் வழக்கமான பட்ஜெட் நடவடிக்கைகளுக்குத் தேவையான மொத்தத் தொகையில் 70 சதவிகிதத்தை மட்டுமே உறுப்பு நாடுகள் வழங்கியுள்ளன. இதன் காரணமாக, செப்டம்பர் மாத இறுதியில் 230 மில்லியன் டாலர் பணப் பற்றாக்குறை உள்ளது.

எங்கள் பணப்புழக்க இருப்புக்களை மாத இறுதிக்குள் குறைக்கும் அபாயத்தை நாங்கள் உணருகிறோம். எங்கள் நிதி ஆரோக்கியத்திற்கான இறுதி பொறுப்பு உறுப்பு நாடுகளிடம் உள்ளது. செலவுகளைக் குறைக்க, மாநாடுகள் மற்றும் கூட்டங்களை ஒத்திவைத்தல் மற்றும் சேவைகளைக் குறைத்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளன. அதே நேரத்தில் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மட்டுமே வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வது என முடிவெடுத்துள்ளோம், என்று கூறியுள்ளார். 2018-19ம் ஆண்டுக்கான நிதியாக 5.4 மில்லியன் டாலர் வரையறுக்கப்பட்டதாகவும், அதில் 22 சதவகித பங்களிப்பை அமெரிக்கா வழங்கியுள்ளது எனவும் குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஐ.நா., அதிகாரி ஒருவர், நிதிப்பற்றாக்குறை காரணமாக, தேவையான பணத்தை வழங்கும்படி உறுப்பு நாடுகளிடம் ஐ.நா., பொதுச்செயலர் குட்ரெஸ் வலியுறுத்தினார். ஆனால், பணம் வழங்க அந்நாடுகள் மறுத்துவிட்டன, என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: