புதிய டெர்மினஸ் கட்டுவதற்கு வசதியாக பரேலில் உள்ள ரயில்வே பணிமனை மாட்டுங்காவுக்கு மாற்றப்படுகிறது

மும்பை: நீண்ட தூர ரயில்களுக்கான டெர்மினஸ் அமைப்பதற்கு வசதியாத பரேலில் உள்ள ரயில்வே பணிமனையை மாட்டுங்காவுக்கு மாற்ற மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. மும்பையில், மத்திய ரயில்வே பிரிவில், தாதர், சி.எஸ்.எம்.டி. மற்றும் குர்லாவில் உள்ள லோக்மான்யா திலக் ஆகிய இடங்களில் நீண்ட தூர ரயில்களுக்கான டெர்மினஸ்கள் உள்ளன. ஆனால் அதிகளவில் நீண்ட தூர ரயில்கள் இயக்கப்படுவதால் தாதரில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதே போல குர்லாவில் உள்ள லோக்மான்ய திலக் டெர்மினஸ்சிலும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நெரிசலை குறைக்கும் நோக்கத்தோடு, பரேலில் நீண்ட தூர ரயில்களுக்காக புதிய டெர்மினல் ஒன்றை அமைக்க மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

ஆனால் பரேலில் போதிய இடவசதி இல்லை. எனவே பரேலில் உள்ள ரயில் பணிமனை இருக்கும் இடத்தில் புதிய டெர்மினசை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பரேலில் உள்ள ரயில்வே பணிமனையின்  பணிகளை மாட்டுங்காவில் உள்ள ரயில் பணிமனைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. சில பணிகள் சான்பாடாவில் இருக்கும் ரயில்வே பணிமனைக்கு மாற்றப்படும். பரேல் பணிமனையில் பணி புரியும் தொழிலாளர்களில் பலர் மாட்டுங்கா பணிமனைக்கு மாற்றப்படுவார்கள். வேறு சிலர் தங்களை அமராவதியில் உள்ள பன்னேரா ரயில் பணிமனைக்கு மாற்றுமாறு கோரியுள்ளனர். அது பற்றியும் அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

ரயில் பணிமனை பணிகளை பரேலில் இருந்து மாட்டுங்காவுக்கு அல்லது வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு நிதி ஒதுக்குமாறு, மத்திய ரயில்வேயின் மும்பை மண்டலம் ரயில்வே வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. பரேல் பணிமனையின் பணிகள் மாட்டுங்காவுக்கு மாற்றப்பட்ட பின்னர் பரேல் பணிமனை இருக்கும் இடத்தில் புதிய டெர்மினஸ் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: