மும்பை ஆரே காலனியில் பெரும் பரபரப்பு மரங்களை வெட்ட மக்கள் எதிர்ப்பு

மும்பை: மும்பை, ஆரே காலனியில் மரங்களை வெட்ட எதிர்ப்பு ெதரிவித்த சமூக ஆர்வலர்கள் உட்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர். அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மும்பையில் தொடர்ந்து பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு மாநில அரசு மெட்ரோ வழித்தடங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன்படி மெட்ரோ-3 திட்டத்துக்காக ஆரே காலனியில் மெட்ரோ கார்ஷெட் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்காக அந்த பகுதியில் உள்ள 2,700 மரங்களை வெட்ட மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனுக்கு மும்பை மாநகராட்சி அனுமதி வழங்கியது.இது சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த பகுதியில் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து மும்பை உயர் நீதிமன்றத்தில் நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் இந்த மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதைத் தொடர்ந்து மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நேற்று முன்தினம் இரவு முதல் மரங்களை வெட்டும் பணியை தொடங்கியது. இதுபற்றி கேள்விப்பட்டதும் நூற்றுக்கணக்கான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆரே காலனி பகுதியில் கூடி போராட்டம் நடத்தினர். அதிகாரிகளை மரங்களை வெட்ட விடாமல் தடுத்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதுவரை 200 மரங்களுக்கும் மேல் வெட்டப்பட்டதாக ஆர்வலர்கள் தெரிவித்தனர். ஆர்வலர்கள் போராட்டம் நடத்தத் தொடங்கியதும் போலீசார் ஒட்டுமொத்த ஆரே காலனி பகுதியையும் சுற்றி வளைத்தனர். அங்கு கூடியிருந்தவர்களை கலைந்து செல்லும்படி கூறினர். மேலும் அவர்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றவும் ெசய்தனர்.தற்போது ஆரே காலனி, கோரேகாவ் செக்போஸ்ட் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடத்திய குறைந்தது 38 பேருக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் 60 பேரை கைது செய்துள்ளனர்.இந்த விவகாரம் அக்டோபர் 10ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் விசாரணைக்கு வரவிருப்பதால் அதற்கு முன்பாகவே அனைத்து மரங்களையும் வெட்டிவிட மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் திட்டம் போட்டுள்ளதாக ஆர்வலர்கள் கூறினர்.

எதிர்க்கட்சிகள் கண்டனம்

ஆரே காலனியில் மரங்களை காப்பாற்ற ஆளும் பாஜ மற்றும் சிவசேனா கட்சிகள் தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகளான காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் இது தொடர்பாக தனது டிவிட்டர் பதிவில், “ஆரே காலனியில் மரங்களை வெட்டுவது மும்பைவாசிகள் மீது நடத்தப்படும் தாக்குதல் அன்றி வேறல்ல. சிவசேனா கட்சிதான் கடந்த 25 ஆண்டுகளாக மும்பை மக்களை மிரட்டி வந்தது. இப்போது பாஜ.வுடன் சேர்ந்து கொண்டு சாமானிய மக்களை மிரட்டுகிறது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும்படி போராடி வந்த போலி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இப்போது மரங்கள் வெட்டப்படும்போது எங்கே சென்றார்கள்?” என்று பதிவிட்டிருக்கிறார்.மற்றொரு தேசியவாத காங்கிரஸ் தலைவரான தனஞ்செய் முண்டே, மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்களின் குரலை மாநில அரசு ஒடுக்குவதாக குற்றம்சாட்டினார். மகாராஷ்டிரா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த் இது தொடர்பாக தமது டிவிட்டர் பதிவில், “சிவசேனா மாநில அரசில் இடம் பெற்றிருப்பதால் மரங்கள் வெட்டப்படுவதை அக்கட்சியால் தடுத்து நிறுத்த முடியும். ஆனால் மரங்களை பாதுகாப்பதைக் காட்டிலும் மெகா கூட்டணிதான் அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

ஆரே காலனியில் மரங்களை வெட்டும் பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நேற்று புதிதாக ஒரு மனுவை மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். ஆரே காலனியில் 2,656 மரங்களை வெட்ட மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.சி.தர்மாதிகாரி மற்றும் ஏ.கே.மேனன் ஆகியோர் அடங்கிய அமர்வு அவசர வழக்காக விசாரித்தது. மனு மீதான விசாரணைக்கு பிறகு, ஆரே காலனியில் மரங்களை வெட்ட தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். அந்த மனுவையும் தள்ளுபடி செய்தனர்.

Related Stories: