பீகாரில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி, சானிடரி நாப்கின்கள் வழங்கிய டாக்டர்கள் குழு

பாட்னா: பீகார் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு டாக்டர் குழு ஒன்று மருத்துவ உதவியும் பெண்களுக்கு நாப்கின்களும் வழங்கி உதவியுள்ளது. பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனத்தமழை பெய்தது. இதனால் தலைநகர் பாட்னா உள்பட பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலர் இன்னும் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். மழை மற்றும் வெள்ளம் காரணமாக பொதுமக்கள் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புக்கு ஆளாகினர். இந்த நிலையில் அவர்களுக்கு மும்பையை சேர்ந்த `உங்களுக்கான டாக்டர்கள்’ (டிஎப்ஒய்) என்ற தன்னார்வ அமைப்பு உதவியது. இந்த குழுவில் அசாமை சேர்ந்த 2 டாக்டர்கள், ஒரு நர்ஸ், கேரளா மற்றும் பீகாரை சேர்ந்த மீட்புபணியில் ஈடுபடும் ஊழியர்கள், மருத்துவ உதவியாளர்கள் என 15 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் ஏற்பட்ட பல்வேறு பேரிடர்களின் போது உதவி பணியில் ஈடுபட்டவர்கள்.

கடந்த செப்டம்பர் 30ம் தேதி பீகாரில் பெய்த மழையால் தலைநகர் பாட்னாவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பாட்னாவின் புறநகர் பகுதியான  ராஜேந்திரா நகர் மேம்பால பகுதியில் இந்த டாக்டர்கள் குழு முகாமிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தது. இது தொடர்பாக டிஎப்ஒய் அமைப்பின் நிறுவனர் ரவிகாந்த் சிங் கூறியதாவது: மருத்துவ முகாமில் பலபேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற வந்திருந்தார்கள். அவர்களை சோதித்தபோது தீவிர சிகிச்சை அளிக்க வேண்டியிருந்ததை அறிந்தோம். இதற்காக உள்நோயாளிகள் பிரிவையும் அடுத்த சில நாட்களில் ஏற்படுத்தி அந்த முகாமிலே தொடங்கி சிகிச்சை அளித்தோம். எங்களிடம் சிகிச்சை பெற வந்த பலருக்கு தொற்றுநோய் பாதிப்பு அதிகம் இருந்தது. அதிகநேரம் நீரில் இருந்ததால் அவர்களது தோல்களில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. சிலர் அலர்ஜியால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு எங்கள் குழு சிகிச்சை அளித்தது. எங்களிடம் இருந்த 6 படகுகள் மூலம் எங்களது மீட்பு குழுவினர் வெள்ளத்தில் சிக்கிய இடங்களுக்கு சென்றனர். அங்கு வெள்ளத்தில் சிக்கி தவித்த பெண்கள் பலருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தது. அவர்களுக்கு ஏராளமான சானிடரி நாப்கின்களை வழங்கினோம். இது தவிர எங்கள் முகாமுக்கு வந்த பெண்களுக்கும் இலவசமாக நாப்கின்கள் வழங்கப்பட்டது.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: