ராதாபுரம் சட்டமன்ற தொகுதியின் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட இடைகாலத்தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதேபோல, ராதாபுரம் தொகுதி வாக்குகள் மறு எண்ணிக்கைக்கு தடையில்லை என்றும் எண்ணிக்கை தொடர்ந்து நடைபெறும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் தொடர்ந்த வழக்கின் உத்தரவுபடி ராதாபுரம் சட்டமன்ற தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை இன்று காலை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவு, அதிமுக வேட்பாளர் இன்பதுரையிடம் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இன்பதுரையின் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், மின்னணு இயந்திரத்தில் பதிவான 19, 20, 21 ஆகிய சுற்றுகளின் வாக்குகளையும், எண்ணப்படாத 203 வாக்குகள் உட்பட 1,508 தபால் வாக்குகளையும் மறு எண்ணிக்கை நடத்துவதற்கு உத்தரவிட வேண்டும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வெற்றி செல்லாது என்றும் உத்தரவிட கோரிக்கை வைத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தபால் வாக்குகளை மீண்டும் எண்ணும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், மறுவாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்கக்கோரி எம்எல்ஏ இன்பதுரை, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்து மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை என உத்தரவிட்டது.

அதன்படி, இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், எம்எல்ஏ இன்பதுரை தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எண்ணப்படாத 203 வாக்குகள் செல்லாத வாக்குகள், எனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் மறு வாக்கு எண்ணிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என இன்பதுரை தரப்பில் வாதிடப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அதேவேளையில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்த நடத்தலாம் என தெரிவித்த நீதிபதிகள் முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளனர். மேலும் எதிர்மனுதாரராக உள்ள அப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் மாதம் 23ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Related Stories: