புதிய கல்வி கொள்கையை கண்டித்து பெரியார் சிலை முன்பு நகல் எரித்து போராட்டம்: திராவிடர் விடுதலை கழகத்தினர் கைது

சென்னை: மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய கல்வி கொள்கை திட்டத்தில் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்த திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கல்வி கொள்கை திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் ஏழை எளிய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். இந்த திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறக்கோரி திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி  வருகின்றன. இந்நிலையில் புதிய கல்வி கொள்கை திட்டத்தை திரும்ப பெறக்கோரி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நகல் எரிக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றும், சென்னையில் சிம்சன் அருகே உள்ள  பெரியார் சிலை அருகே நகல் எரிக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக, நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திட்டமிட்டபடி நேற்று காலை 11 மணிக்கு திராவிடர் விடுதலை கழக நிர்வாகி விடுதலை ராஜேந்திரன் தலைமையில் 70க்கும் மேற்பட்டோர் புதிய கல்வி  கொள்கையின் அரசாணை நகலுடன் ஒன்று கூடி புதிய கல்வி கொள்கை திட்டத்தை ரத்து செய்ய கோரி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.பின்னர் திடீரென புதிய கல்வி கொள்கையின் அரசாணை நகலை பெரியார் சிலை முன்பு தீவைத்து எரித்தனர். இதை பார்த்த போலீசார் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.அதைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை ராஜேந்திரன் உட்பட 70 பேரை போலீசார் கைது செய்தனர். பிறகு அனைவரையும் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சமுதாய நல கூடத்தில் அடைத்து மாலை விடுவித்தனர். இந்த  போராட்டத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: