அழியும் பறவைகள்

நன்றி குங்குமம் முத்தாரம்

உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல; மரம், செடி, கொடி, பறவை, விலங்குகள் என பல்லுயிர்களுக்கான சாம்ராஜ்யம் இது. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்த மக்கள் தொகையுடன் இப்போதிருக்கும் மக்கள் தொகையை ஒப்பிடும்போது பல மடங்கு மக்கள் தொகை அதிகரித்திருக்கிறது. ஆனால், ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்த மரங்கள், பறவைகள், விலங்குகளுடன் இப்போதைய மரங்கள், விலங்குகள், பறவைகளை ஒப்பிட்டால் அவற்றில் பல முற்றிலுமே அழிந்துவிட்டன. இன்று சிட்டுக்குருவியைப் பார்ப்பதே ஒரு அதிசய நிகழ்வாகிவிட்டது. கடந்த 50 வருடங்களில் அமெரிக்கா மற்றும் கனடாவிலுள்ள பறவைகளில் 300 கோடி அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்றன. குறிப்பாக வட அமெரிக்காவில் 1970-களில் இருந்த பறவைகளோடு ஒப்பிடும்போது இப்போது 29% பறவைகள் அழிந்துவிட்டன. ஆசியாவிலும் பறவைகள் வேகமாக அழிந்துவருகின்றன. இந்தோனேஷியா, ஜாவாவில் அங்கும் இங்கும் சுற்றித்திருந்த பாடும் பறவைகளை ஏதாவது காட்டுக்குள், அதுவும் அதன் கூட்டில் மட்டுமே பார்க்க முடிகிறது.

ஆசியாவில் பாடும் பறவைகளைப் பிடித்து விற்பனை செய்வது பெரும் பிசினஸாக வளர்ந்துவிட்டதும் இந்தப் பறவைகள் அழிந்து வருவதற்கு ஒரு காரணம். ஜாவாவில் மட்டுமே 7.5 கோடி பாடும் பறவைகள் செல்லப்பறவையாக வளர்க்கப்படுகின்றன. தவிர, பாடும் பறவைகளுக்கு இடையே பாட்டுப்போட்டி கனஜோராக அரங்கேறுகிறது. போட்டியில் முதல் பரிசாக 40 ஆயிரம் பவுண்ட் வரை கிடைக்கிறதாம். அத்துடன் பாடும் பறவை வணிகம் இந்தோனேஷியா பொருளாதாரத்திலேயே முக்கியப் பங்கு வகிக்கிறதாம். வட அமெரிக்காவில் பறவைகள் அழிந்ததற்கு அதன் வாழ்விடங்கள் மனிதச் செயல்பாடுகளால் அழிந்துபோனது தான் முக்கிய காரணம் என்கின்றனர் பறவையியல் வல்லுநர்கள். கென் ரோஸன்பெர்க் என்ற பறவையியல் நிபுணர் அமெரிக்கன் பறவைகள் பாதுகாப்பு மையத்துடன் இணைந்து இந்த ஆய்வைச் செய்திருக்கிறார். ‘‘இப்போது எஞ்சியிருக்கும் பறவைகளையாவது நாம் காப்பாற்ற வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை மனித இனமே சேர்ந்து எடுக்க வேண்டும்...’’ என்று கோரிக்கை வைக்கிறார் கென்.

Related Stories: