உச்ச நீதிமன்றத்தில் வைகோ தாக்கல் செய்த பரூக் அப்துல்லாவை ஆஜர்படுத்த கோரிய ஆட்கொணர்வு மனு தள்ளுபடி

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை உச்ச  நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. காஷ்மீர் மாநில பிரிப்புக்கு பின்னர் அம்மாநில தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இந்த நிலையில், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக்கோரி மதிமுக  பொதுச்செயலாளர் வைகோ ஆட்கொணர்வு மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து மனுவை விசாரித்த நீதிமன்றம், அதுகுறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கேகே.வேணுகோபால், தனது வாதத்தில், “ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் முன்னாள் முதல்வரும், எம்பியுமான பரூக் அப்துல்லா பொதுமக்கள்  பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது மாநில பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். இதில் நீதிமன்றங்கள் தலையிட அதிகாரம் இல்லை. அதனால் இதுகுறித்து தொடரப்பட்ட மனுவில் எந்தவித  முகாந்திரமும் கிடையாது’’ என வாதிட்டார். இதையடுத்து தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதால் மனுதாரர்  அதுகுறித்த அமைப்பிடமோ அல்லது காஷ்மீர் மாநிலத்தின் உயர் நீதிமன்றத்திற்கோ சென்று தான் முறையிட வேண்டும்’’ எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: