சென்னையின் குடிநீர் தேவைக்காக இன்னும் 2 நாட்களில் பூண்டி நீர்த்தேக்கம் திறப்பு: பொதுப்பணித்துறையினர் தகவல்

திருவள்ளூர்: சென்னையின் குடிநீர் தேவைக்காக இன்னும் 2 நாட்களில் பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னையின் குடிநீர் ஆதாரமாக பார்க்கப்படக்கூடிய பூண்டி ஏரியின் ஒட்டுமொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடியாகும். இந்த ஏரியானது கடந்த காலங்களில் வறண்டு காணப்பட்ட நிலையில் கடந்த 18ம் தேதி பெய்த கனமழை காரணமாக இந்த பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்த நிலையில் கண்டலேறு அணையில் இருந்து வரக்கூடிய தண்ணீரும் சேர்ந்து தற்போது இதன் நீரிருப்பு 553 மில்லியன் கனஅடியாக இருக்கிறது. அதாவது கண்டலேறு அணையில் இருந்து கடந்த 25ம் தேதி சென்னைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அது தமிழக எல்லை பகுதியான ஜீரோ பாய்ண்ட்க்கு வந்தடைந்து, அங்கிருந்து பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. இதை தொடர்ந்து நேற்றைய நிலவரப்படி 150 கனஅடி என்ற விகிதத்தில் வந்து கொண்டிருந்த தண்ணீரானது தற்போது 557 என்ற கனஅடி விகிதத்தில் வந்து கொண்டிருக்கிறது.

இந்த நீர்வரத்து இன்னும் அதிகரிக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது இந்த ஏரியின் ஒட்டுமொத்த கொள்ளளவான 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடியில் 1000 மில்லியன் கனஅடி நெருங்கினால் இங்கிருந்து சென்னைக்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கான முடிவு எடுக்கப்படும். அந்த வகையில் தற்போது நீர்வரத்து அதிகரித்து காணப்படும் சூழ்நிலையில் இன்னும் இரண்டு நாட்களில் சென்னைக்கு குடிநீர் அனுப்ப பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதை தொடர்ந்து சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகள் செய்து வரும் நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் பூண்டி ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படக்கூடிய சூழ்நிலை உள்ளது.

Related Stories: