சுற்றுலா தலமாகுமா கீழடி..? பொதுமக்கள் கோரிக்கை

திருப்புவனம்: கீழடி அகழாய்வை காண பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று குவிந்தனர். இதனால் கீழடியை சுற்றுலா தலமாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும் அகழாய்வை காண 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குவிந்ததால் களைகட்டியது. கீழடியில் 5ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. கடந்த ஜுன் 13ம் தேதி தொடங்கிய அகழாய்வு செப்டம்பர் 30 உடன் முடிவடைய உள்ள நிலையில், அமைச்சர் பாண்டியராஜன் மேலும் இரு வாரங்களுக்கு அகழாய்வு நடைபெறும் என அறிவித்தார். 4ம் கட்ட அகழாய்வு அறிக்கை வெளியானதை அடுத்து கீழடிக்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலை முதலே ஏராளமானோர் வருகை தந்தனர். மதுரை, கோவை, ஈரோடு, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானோர் குடும்பம், குடும்பமாக கீழடிக்கு வந்தவண்ணம் உள்ளனர். அகழாய்வில் எடுக்கப்பட்ட கால்வாய் போன்ற கட்டுமானம், நீண்டசெங்கல் கட்டுமானம், உறைகிணறு, தொட்டி அமைப்பிலான செங்கல் கட்டுமானம் போன்றவற்றை கண்டு வியந்தனர்.

இதுதவிர அகழாய்வில் எடுக்கப்பட்ட அம்மிகல், சல்லடை பானை ஓடு, மனித, விலங்கு முகங்கள், தாயக்கட்டை உள்ளிட்ட பல்வேறு தொல் பொருட்களை கண்டும் வியந்தனர். இதுவரை 700க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறிந்த நிலையில் அகழாய்வு நீட்டிக்கப்பட்டதால் மேலும் பொருட்கள் கண்டறிய வாய்ப்புள்ளது. நேற்று வேலூர் விஐடி பல்கலை கழக வேந்தர் விசுவநாதன் கீழடி அகழாய்வை நேரில் பார்வையிட்டார். மதியம் வரை சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கீழடி அகழாய்வை கண்டு ரசித்துள்ளனர். நான்கு வழிச்சாலையில் இருந்து கீழடி செல்லும் பாதையில் வரிசையாக கார்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அருங்காட்சியகம் துவக்குவதற்குள் கீழடி சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என பல்வேறு தர்ப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: