உயர்மின்னழுத்த கோபுர திட்டத்தை எதிர்த்து போராடியவர்களை விடுவிக்கவும்: கொங்கு ஈஸ்வரன் வலியுறுத்தல்

ஈரோடு: உயர்மின்னழுத்த கோபுர திட்டத்தை எதிர்த்து போராடியவர்களை விடுவிக்க வேண்டும் என கொங்கு ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். உயர்மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கும் திட்டத்துக்கு எதிராக போராடிய விவசாயிகளை விடுவிக்காவிட்டால் கட்சியின் சார்பில் விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுகுழுக் கூட்டம் ஈரோடு முள்ளாம்பரப்பில் நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஈஸ்வரன், தமிழக முதலமைச்சர், கேரள முதலமைச்சர் பினராய் விஜயனை சந்தித்து பேசி முடிவு செய்ததுப்படி பாண்டியாறு பொன்னம்புழா திட்டத்தை விரைந்து முடித்திட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கூட்டு குடிநீர் திட்டத்தில் உள்ள குளறுபடியை நீக்கி மக்களுக்கு குடிநீர் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து நவம்பர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும், இதில் தனது கட்சி அதிக இடங்களை கேட்டு பெற்று போட்டியிடும் என்றும் ஈஸ்வரன் தெரிவித்தார். இதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, பாண்டியாறு பொன்னம்புழா திட்டம் நிறைவேற்றப்பட்டால் நீலகிரி மலையிலேயே உருவாகின்ற தண்ணீர் கேரளாவிற்கு செல்வதற்கு பதிலாக தமிழகத்தின்  பக்கம் திருப்பப்படும் எனவும் அதன் மூலமாக கொங்கு மண்டலத்தினுடைய தண்ணீர் பஞ்சத்தை போக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் தமிழகத்தின் முதலமைச்சர் கேரள முதலமைச்சரோடு பாண்டியாறு பொன்னம்புழா திட்டத்தை நிறைவேற்றுவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கூறியிருப்பது தங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: