பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமானம் தாங்கி கப்பலில் இரவு முழுவதும் பயணம்: போர் பயிற்சிகளை பார்த்து வியப்பு

புதுடெல்லி: மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானம் தாங்கி  கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் நேற்று முன்தினம் இரவு முழுவதும்  பயணித்து, கடற்படையினர் மேற்கொண்ட போர் பயிற்சிகளை பார்வையிட்டார்.  மும்பை   கடற்படை தளத்தில் நேற்று முன்தினம் நடந்த விழாவில் பங்கேற்ற பாதுகாப்பு  துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஐஎன்எஸ். கந்தேரி,  ஐஎன்எஸ். நீலகிரி கப்பல்களை நாட்டுக்கு  அர்ப்பணித்தார். அதைத் தொடர்ந்து மேற்கு கடலோரப் பகுதியில் ரோந்துப்  பணியில் ஈடுபட்டுள்ள விமானந் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில்  இரவு முழுவதும் பயணித்து நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க் கப்பல்கள்,  விமானங்களின் தாக்குதல் போன்ற போர் பயிற்சிகளை கண்டு வியந்தார்.

பின்னர் காலையில், ராஜ்நாத் சிங் வீரர்களுடன் இணைந்து யோகா பயிற்சியில்  ஈடுபட்டார்.

பிறகு கப்பலில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘‘யோகாவுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த  பெருமை மோடியையே சாரும். ஐநா.வில் யோகா குறித்த தீர்மானத்தை கொண்டு வந்து,  அதற்கு 177 நாடுகளின் ஆதரவைப் பெற்றார் மோடி. அனைத்து நாடுகளிலும்  குறிப்பிட்ட அளவு மக்கள் யோகா பயிற்சி  வருகின்றனர். நமது அண்டை நாடான பாகிஸ்தான், பழிவாங்கும்  செயல்களில் ஈடுபட்டு இந்தியாவை சீர்குலைக்க முயற்சிக்கிறது. கடந்த 2008, நவம்பர் 26ம் தேதி நடந்த  மும்பை தாக்குதலை யாராலும் மறக்க முடியாது. சில தவறு ஒருமுறை நடக்கலாம்,  ஆனால் அது மீண்டும் நடக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. அதனால், நமது  கடற்படையினரும், கடலோர காவல் படையினரும் கண்காணிப்புடன் செயல்பட்டு  வருகின்றனர். தீவிரவாதிகள் நமது எல்லைக்குள் இனிமேல் வந்தால்  என்னவாகும் என்பதை யாரும் சொல்ல தேவையில்லை. தீவிரவாதிகளுக்கு என்ன  நேரிடும் என்பது உலகிற்கே தெரியும்,’’ என்றார்.

Related Stories: