வடமாநிலங்களில் கடந்த 4 நாட்களில் மழைக்கு 110 பேர் பலி

புதுடெல்லி: உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழைக்கு கடந்த 4 நாட்களில் 110 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். ஆனால், இந்தாண்டு வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கி தற்போது முடிவடையும் போது தீவிரமடைந்து வருகிறது. உத்தர பிரதேசம், பீகார், குஜராத், உத்தரகாண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர் கனமழை மிரட்டி வருகிறது. இதனால், பல மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.

ரயில் சேவை, மருத்துவ வசதி, மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல், மக்கள் திணறி வருகின்றனர். அதிலும் குறிப்பாக உத்தர பிரதேசம், பீகாரில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மக்கள் தவிக்கின்றனர். இவர்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 4 நாட்களில் அதிகபட்சமாக உபி.யில் 79 பேரும், பீகாரில் 13 பேரும், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் மொத்தம் 13 பேரும் குஜராத்தில் வெள்ளத்தில் காரில் சிக்கியதில் 3 பேர் உள்பட மொத்தம் 110 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று முடிகிறது; ஆனா, முடியாது

இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் மிருதுன்ஜய் மொகாபத்ரா நேற்று அளித்த பேட்டியில், ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை, வழக்கமாக செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடியும். ஆனால், இம்முறை அது அக்டோபர் 5ம் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளது. அக்டோபர் 3ம் தேதி பீகார், உத்தர பிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்கத்தில் கனமழையும், பஞ்சாப், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உட்பகுதி, வட ஒடிசா, குஜராத், மிசோரம், திரிபுரா, கேரளா, லட்சத்தீவுகளில் வழக்கத்தை விட கூடுதலாகவும் மழை பெய்யக்கூடும்,’’ என்று கூறினார்.

Related Stories: