மக்களுக்கு புதிய ஆர்வம், புதிய சக்தி, புதிய தீர்மானம் அளிக்கட்டும்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நவராத்திரி, தசரா வாழ்த்து

டெல்லி: நவராத்திரி மற்றும் தசரா திருவிழா இன்று தொடங்குவதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சக்தியை நாயகியாக கொண்டு 9 நாட்கள் வழிபாடு செய்யும் நவராத்திரி விழா அனைத்து  கோவில்களிலும் இன்று துவங்குகிறது. பலரும் தங்களது வீடுகளிலும் கொலு வைத்து வழிபடுவர். நவராத்திரிக்காக நாட்டின் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. நவராத்திரியின் முதல்நாளான இன்று  மும்பையின் பிரசித்தி பெற்ற மும்பா தேவி கோவிலில் சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து டில்லியில் உள்ள கல்காஜி கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனைபோல, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள்  விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபடுகின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டு தசரா திருவிழா இன்று காலையில் கொடியேற்றுத்துடன் தொடங்கியது. தசரா திருவிழா 10 நாட்கள் நடக்கிறது.  தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகிஷாசுர வதம் அக்டோபர் 8-ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நவராத்திரி மற்றும் தசரா விழா கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துக்கள். இந்த திருவிழா காலம் மக்களுக்கு புதிய ஆர்வம், புதிய சக்தி, புதிய  தீர்மானம் ஆகியவற்றை அளிக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே, வடமாநிலங்களில் நவராத்திரி விழா கோலாகலமாக துவங்கியுள்ளது. இதையொட்டி கோவில்களிலும் வீடுகளிலும் பொதுமக்கள் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் நவராத்திரி  திருவிழாவையொட்டி பெண்கள் சிலர் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பிரதமர் மோடி ஆட்சியின் சாதனைகளை விளக்கும் விதமாக முதுகின் மீது ஓவியமாக வரைந்து கொண்டனர். ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து  வழங்கும் சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை குறிக்கும் விதமாகவும், திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டதை குறிப்பிடும் வகையிலும் ஓவியங்களை தீட்டியிருந்தனர். மேலும் சந்திராயன் - 2 திட்டத்தின் சாதனையை  போற்றும் வகையிலும் ஓவியம் வரையப்பட்டிருந்தது.

Related Stories: