தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் வாரத்தில் ஒருநாள் நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

கோவை: தமிழக அரசு பள்ளிகளில் வாரத்தில் ஒருநாள் நீதிபோதனை வகுப்பும், மாதத்திற்கு ஒருமுறை தற்காப்புக்கலை வகுப்புகளும் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.கோவை நீலம்பூர் அருகே தனியார் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டு  விருதுகளை வழங்கினர். நிகழ்ச்சியில்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:  இன்றைய தலைமுறையினரிடையே பாச உணர்வு குறைந்துள்ளது. அதனை மேம்படுத்தவும், மற்றவர்களுடன் பழகும் விதங்களை கற்றுக்கொடுக்கும் விதமாகவும், வாரத்தில் ஒருநாள் அரசு பள்ளிகளில் நீதிபோதனை வகுப்பு நடத்தப்படும்.  ஒழுக்கத்துடன் சேர்ந்த கல்வி தேவை என்பதை அடிப்படையாக கொண்டு இந்த வகுப்பு துவங்குகிறது. அதேநேரத்தில் தன்னிடத்தில் தவறாக நடந்துகொள்பவர்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள அடுத்த மாதத்தில் இருந்து தற்காப்புக்கலை  வகுப்பு நடத்தப்படும்.

பள்ளிக்கல்வித்துறை மூலம் நாட்டிலேயே முதன்முறையாக தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய புதிய பாடத்திட்டத்தில் நீட் தேர்வுக்கான 90 சதவீத  விடைகள் இருக்கிறது.

சிறப்பாசிரியர்களை பணியில் சேர்க்கும்போதே ₹5 ஆயிரம் ஊதியம், வாரத்தில் மூன்று நாட்கள் வேலை என்று கூறிதான் இணைத்தோம். அவர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி நீதிமன்றத்திற்கு சென்றால் இதையே நீதிமன்றத்தில் கூறுவோம்.  இவ்வாறு அவர் கூறினார்.போட்டி தேர்வு: ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், `ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான போட்டி தேர்வு அடுத்த வாரம் துவங்கும். முதுகலை ஆசிரியர்களுக்காக நடந்து வரும் டிஆர்பி தேர்வில் எவ்வித  பிரச்னையும் ஏற்படவில்லை’ என்றார்.

Related Stories: