வகுப்பறையில் அழுத மாணவியின் குழந்தையை முதுகில் சுமந்து பாடம் நடத்திய பேராசிரியை!.. அகிலமெங்கும் பரவி வரும் `அன்பு’ காட்சி

வாஷிங்டன்: பெண் பேராசிரியர் ஒருவர் அங்கு கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரின் குழந்தையை முதுகில் வைத்துக் கட்டிக்கொண்டு தொடர்ந்து 3 மணி நேரம் பாடம் நடத்திய சம்பவம் குறித்த புகைப்படம் உலகம் முழுவதும் பரவி வருகிறது.  இந்த புகைப்படம் செப்டம்பர் 20ம்தேதி சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டது. சமூக வலைதளத்தை முழுமையாக ஆக்கிரமித்துள்ள பேராசிரியரின் அன்பு மற்றும் அவரது பொறுப்பு குறித்தும் வியந்து பாராட்டி வருகின்றனர். அதுபற்றிய விவரம்:- அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள கிக்வினட் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர் தனது ஆண் குழந்தையை தூக்கிக்கொண்டு கல்லூரிக்கு வந்திருக்கிறார். அப்போது பேராசிரியர் ரமதா சிசாகோ சிஸ்ஸே பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

ஆனால் குழந்தையுடன் வந்த மாணவி ஆர்வமாக கவனிக்க விரும்பினாலும் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு பாடத்தை கவனிக்க முடியாமல் சிரமப்பட்டு உள்ளார். ஏனெனில் குழந்தையை வைத்துக்கொள்ளும் பேபிசிட்டரை அவர் தொலைத்துவிட்டார். இதனால் குழந்தை அழுதது. மாணவியால் பாடத்தை கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் பேராசிரியர் போர்டில் எழுதிப்போடுவதையும் அவரால் எழுத முடியவில்லை. இதை கவனித்த பேராசிரியர் சிஸ்ஸே, குழந்தையை வாங்கி பாதுகாப்பாக ஒரு துணியால் தன் முதுகில் கட்டிக்கொண்டார். பின்னர் குழந்தையை சுமந்தபடி தொடர்ந்து 3 மணி நேரம் வகுப்பறையில் பாடம் நடத்தியிருக்கிறார் சிஸ்ஸே.

பேராசிரியர் சிஸ்ஸே 3 மணி நேரமாக குழந்தையை சுமந்துகொண்டு பாடம் நடத்தியபோதும், ஒரு முறை கூட குழந்தையை அவர் அழவிடவில்லை. உடனுக்குடன் பாட்டில் பாலை கொடுத்து அழவிடாமல் பார்த்துக்கொண்டார் தன் குழந்தையின் மீதும் தனது படிப்பின் மீது பேராசிரியர் காட்டிய அன்பை கண்டு வியந்து போனார் அந்த மாணவி. அத்துடன் அந்த கல்லூரியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பலரும் பேராசிரியரின் அன்பை கண்டு நெகிழ்ந்தனர். இந்நிலையில் குழந்தையுடன் பாடம் நடத்திய கதையை டுவிட்டரில் பேராசிரியர் ரமதா சிசாகோ சிஸ்ஸேவின் மகள் பகிர்ந்துள்ளார். அதில், ``என் தாய்தான் எனக்கு ரோல் மாடல்’’ என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இதை கேட்டும் புகைப்படத்தை பார்த்தும் வியந்து போன நெட்டிசன்கள் இப்படி ஒரு பேராசிரியரா என வியந்து பாராட்டி சமூக வலைதளங்களில் பேராசிரியரின் புகைப்படத்தை முழுமையாக ஆக்கிரமிக்க வைத்தனர். இதன் காரணமாக இப்படத்திற்கு 67000 லைக்குகளும், 11 ஆயிரம் ரீடுவிட்களும் கிடைத்துள்ளது. அன்புக்கு அகிலமெங்கும் மரியாதை கிடைக்கும் என்பதற்கு இந்த நிகழ்வு சிறந்த உதாரணம்.

Related Stories: