பிறக்கும் ஒரு லட்சம் குழந்தைகளில் 66 குழந்தைகள் இறந்து விடுகின்றன : சமூக நலத்துறை அமைச்சர் தகவல்

சேலம்: இந்தியாவில் பிறக்கும் ஒர லட்சம் குழந்தைகளில் 130 குழந்தைகள் இறந்துவிடுகின்றன, ஆனால் தமிழகத்தில் 66 குழந்தைகள்தான் இறக்கின்றன. அதுவும் இல்லாதவகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்தார். சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா சேலத்தில் நேற்று நடந்தது. விழாவில் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா 320 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி வைத்து, சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசியதாவது:

கருவுற்ற தாய்மார்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இல்லை என்ற நிலையை கொண்டு வரவேண்டும். என்ன சாப்பிடலாம் என்பது குறித்து அங்கன்வாடி மைய பணியாளர்கள் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் பல மாநிலங்களில் ஒரு லட்சம் குழந்தைகள் பிறந்தால், அதில் 130 குழந்தைகள் இறக்கின்றன. தமிழகத்தில் வெறும் 66 குழந்தைகள் தான். சிசு மரண விகிதமும் தமிழகத்தில் குறைவு.  இந்தியாவில் ஆயிரம் குழந்தைகளுக்கு 33 சிசுக்கள் இறக்கின்றன. தமிழகத்தில் 16 தான். உடலில் குறைபாடு உள்ள கர்ப்பிணிகள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளவேண்டும். தாய்மார்கள் குழந்தைக்கு ஆறு மாதம் கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதை அங்கன்வாடி பணியாளர்கள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் சரோஜா பேசினார். 

Related Stories: