மனித நேயத்துக்காக உலக நாடுகள் அனைத்தும் தீவிரவாதத்தை ஒழிக்க ஒன்றிணைய வேண்டும்: ஐநா பொதுச்சபையில் மோடி அழைப்பு

நியூயார்க்: ‘‘மனித நேயத்துக்காக தீவிரவாதத்தை ஒழிக்க, உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்,’’ என ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். ஐநாவின் 74வது பொதுச்சபை கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:ஐ.நா பொதுச்சபையில் இந்த ஆண்டில் உரையாற்றும் வாய்ப்பு மிகச் சிறப்பானது. ஏனென்றால், மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினத்தை உலகம் கொண்டாடுகிறது. அமைதி, வளர்ச்சி முன்னேற்றத்துக்காக, உண்மை மற்றும் அகிம்சை பற்றி காந்தி சொன்ன தகவல்கள் இன்றும் பொருத்தமாக உள்ளன. நல்லிணக்கம், அமைதி பற்றி சுவாமி விவேகானந்தர், பல ஆண்டுகளுக்கு முன்பே சிகாகோ மாநாட்டில் உலகுக்கு சொன்னார். அதே தகவலைத்தான் இந்தியா இப்போதும் உலகத்துக்கு சொல்கிறது.   இந்தியாவின் பலமே எங்களின் பண்பாடுதான்.

இந்த உலகம் தீவிரவாதத்தால் பிளவுபட்டுள்ளது.  தீவிரவாதத்தை ஒழிப்பதில் நாங்கள்  தீவிரமாக உள்ளோம். கோபமாகவும் உள்ளோம். சர்வதேச தீவிரவாதத்தை ஒழிப்பது பற்றி முழுமையான விதிமுறைகள் அடங்கிய வரைவு திட்டத்தை, இந்தியா கடந்த 1996ம் ஆண்டே ஐநா பொதுச்சபையில் தெரிவித்தது. தீவிரவாத விஷயத்தில் ஐநா உறுப்பு நாடுகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், அந்த வரைவு திட்டம் செயல்படுத்தப்படாமல் அப்படியே உள்ளது. தீவிரவாதத்துக்கு எதிராக நாம்  ஒன்றிணைந்து போராட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.  புவி வெப்பம் அதிகரிப்பதை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது.

புவி வெப்பத்துக்கு காரணமான மாசுவை வெளியேற்றுவதில் இந்தியாவின் பங்கு மிகவும் குறைவு. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆயுஸ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம், உலகின் மிகச் சிறந்த முக்கியமான திட்டம். நாங்கள் எடுக்கும் முயற்சிகள் விளம்பரப்படுத்துவதற்காக அல்ல. அனைத்து மக்கள் பிரச்னையை மையமாக கொண்டு எடுக்கப்படும் நடவடிக்கைகள். ஒட்டு மொத்த மக்களின் வளர்ச்சிக்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். வரும் 2025ம் ஆண்டுக்குள் டிபி நோயை ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 12 கோடிக்கும் மேலான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 15 கோடி வீடுகளுக்கு தண்ணீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டுக்குள் ஏழைகளுக்கு 2 கோடி வீடுகள் கட்டுவோம்.

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க இந்தியாவில் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகளவிலான வளத்தை அதிகரிக்கும்போது, உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் முன்னோக்கி செல்லும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடி தனது உரையில் பாகிஸ்தான் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’:

பிரதமர் மோடி தனது உரையில், தமிழ் புலவரான கலியன் பூங்குன்றனார் கூறிய ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ வரிகளை குறிப்பிட்டு பேசினார். ‘‘3000 ஆண்டுக்கு முன்பே, இந்தியாவின் தலைசிறந்த புலவர், உலகின் பழமையான தமிழ் மொழியில் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என எழுதியிருக்கிறார். எல்லா இடங்களும், எல்லோருக்கும் சொந்தம் என்பதே இதன் அர்த்தம். எல்லைகளுக்கு அப்பாற்பட்ட இத்தகைய உணர்வே இந்தியாவின் தனித்துவமாகும்’’ என்றார்.

ஈரான் அதிபருடன் மோடி திடீர் சந்திப்பு:

அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டதில் இருந்து, ஈரானுடனான அமெரிக்காவின் உறவு மோசமடைந்து உள்ளது. ஈரானுக்கு பல்வேறு பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது. இந்த நிலையில், நியூயார்க்கில் ஐநா கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த ஈரான் அதிபர் ஹசன் ருஹானியை பிரதமர் மோடி நேற்று முன்தினம் திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்திப்பில் இரு தரப்பு உறவு, வளைகுடா பிராந்தியபாதுகாப்பு, மேம்பாடு உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

ஐநா.வில் காஷ்மீர் பிரச்னையை எழுப்பிய இம்ரான்கான்:

பிரதமர் மோடியை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐ.நா பொதுச் சபையில் தனது முதல் உரையைஆற்றினார். அப்போது, காஷ்மீர் பிரச்சினையை எழுப்பியதோடு, காஷ்மீரில் அமல்டுத்தப்பட்டுள்ள  ‘மனிதாபிமானமற்ற  ஊரடங்கு உத்தரவை’ இந்தியா நீக்க வேண்டும் என்றும்,  இரண்டு அணு ஆயுத அண்டை நாடுகளுக்கிடையில் நேருக்கு நேர் ஏற்பட்டால், அதன் விளைவுகள் அவற்றின் எல்லைகளை கடந்ததாக  இருக்கும் என்றும் எச்சரித்தார்.

Related Stories: