பஸ்சிலிருந்து பார்சல் பெட்டி தவறி விழுந்ததால் சைக்கிளில் சென்றவருக்கு இடுப்பு எலும்பு முறிந்தது: 3 பேர் கைது

பெரம்பூர்: பஸ்ஸில் பார்சல் பெட்டி ஏற்றும்போது தவறி விழுந்ததில்  சாலையில் சைக்கிள் சென்றவருக்கு இடுப்பு எலும்புமுறிவு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்தனர். சென்னை வால்டாக்ஸ் சாலையில் தனியாருக்கு சொந்தமான பஸ் டிராவல்ஸ் அலுவலகங்கள், பார்சல் புக்கிங் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் செல்லும்  பஸ்கள் பார்சல்களை ஏற்றிச் செல்வது வழக்கம். இந்த நிலையில், நேற்று வால்டாக்ஸ் சாலையில் ஒரு பஸ்சை நிறுத்தி பஸ் மீது பார்சல் பெட்டிகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அமெரிக்கன் தூதரக அலுவலகத்தில் காவலாளியாக வேலை செய்து வரும்  கொருக்குப்பேட்டையை சேர்ந்த   நாகராஜ் (48) என்பவர், அவ்வழியே சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.  

பஸ்சிலிருந்த பார்சல் திடீரென தவறி  சைக்கிளில் சென்ற நாகராஜ் மீது விழுந்தது. இதில் அவரது இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இதுகுறித்து யானைகவுனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பஸ் டிராவல்ஸ் புக்கிங் அலுவலக மேலாளர் சென்னை கொளத்தூரை சேர்ந்த ரவிச்சந்திரன் (55),  லோடு ஏற்றிய ரஞ்சித் (34), நாசர் (28) ஆகியோரை  கைது செய்தனர்.   மேலும் பஸ்சை பறிமுதல் செய்தனர். 

Related Stories: