செங்குன்றம் அருகே அதிகாரிகள் நடத்திய சோதனையில் பொதுமக்களுக்கு வழங்காமல் பதுக்கிய 90 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்: விசாரணைக்கு பயந்து பெண் ஊழியர் மயங்கியதால் பரபரப்பு

புழல்: தமிழகத்தில் 34 ஆயிரத்து 773 நியாய விலை கடைகள் உள்ளன. இதன் மூலம் 2 கோடியே 5 லட்சத்து 4818 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், பெரும்பாலான ரேஷன் கடைகளில் மாதம்தோறும் முறையாக பொருட்கள் வழங்குவதில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதுகுறித்து ரேஷன் கடை ஊழியரிடம் கார்டுதாரர்கள் கேட்டால், ‘‘கடைக்கு அரசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு உள்ளிட்டவை குறைந்தளவில் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால், கார்டில் குறிப்பிட்ட அளவு பொருட்களை வழங்க முடியாது,’’ என்று தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இதேபோல், மண்ணெண்ணெயும் கார்டுதாரர்களுக்கு சரிவர வழங்குவதில்லை. மாறாக, பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய அத்தியாவசிய பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்பது மட்டும் தடையின்றி நடைபெற்று வருகிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கார்டுதாரர்களுக்கு முறையாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதில்லை. ஒரு சில கார்டுதாரர்கள் இந்த ரேஷன் அரிசியை வாங்குவதும் இல்லை.

ஆனால், ரேஷன் கடை ஊழியர்கள், கார்டுதாரர்களுக்கு பொருட்களை வழங்கியதாக பொய் கணக்கு காட்டி, அந்த பொருட்களை கடைகள், ஓட்டல்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். சென்னையில் தங்கியுள்ள வட மாநில தொழிலாளர்கள் இந்த ரேஷன் அரிசியை அதிகம் பயன்படுத்துவதால், ரேஷன் கடை ஊழியர்கள் இந்த அரிசியை பதுக்கி அவர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.  

ரேஷன் பொருட்களை முறையாக வழங்காமல், கடை ஊழியர்கள் முறைகேடு செய்வதாக கார்டுதாரர்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வந்தாலும், இந்த முறைகேடு தொடர்ந்து கொண்டுதான் வருகிறது. இந்நிலையில், சென்னை செங்குன்றம் அருகே பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய 90 மூட்டை ரேஷன் அரிசியை, கடை ஊழியர் முறைகேடாக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  சென்னை செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகர், திலகர் தெருவில் உள்ள ரேஷன் கடையில், சமீப காலமாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளர் தயாளனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் பிரகலாதன், ஏட்டு துரைமுருகன் ஆகியோர் நேற்று முன்தினம் மதியம் அந்த ரேஷன் கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய 50 கிலோ எடை கொண்ட 90 அரிசி மூட்டைகள் முறைகேடாக பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது.  அவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து கடை ஊழியர் பாரதி (49) என்பவரிடம்  போலீசார் விசாரித்தனர். அப்போது, பதற்றம் அடைந்த பாரதி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர்.

இதனிடையே தகவலறிந்து அங்கு வந்த பாரதியின் கணவன் குமார், மனைவியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின்படி போலீசார் விசாரிக்கின்றனர். ஊழியர் பாரதி மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. ரேஷன் கடையில் பதுக்கி வைக்கப்பட்ட 90 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: