மத்திய அரசு அறிவிப்பு வல்லபாய் படேல் பெயரில் புது விருது

புதுடெல்லி: நாட்டின் ஒற்றுமைக்காக பாடுபட்டவர்களுக்கு மிக உயரிய விருதாக, “சர்தார் வல்லபாய் படேல் ஒற்றுமை விருது” வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நமது நாடு வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடாகும். நாட்டின் ஒற்றுமைக்காக சிறந்த பங்காற்றியவர்களுக்கு புதிதாக “சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒற்றுமை விருது” என்ற உயரிய விருது வழங்கப்படும். இந்த விருது பெறுவோருக்கு பதக்கம் மற்றும் சான்று வழங்கப்படும். பண உதவியோ அல்லது ரொக்கப்பரிசோ வழங்கப்படாது. ஆண்டுதோறும் 3 பேருக்கு மிகாமல் இந்த விருது வழங்கப்படும். சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31ம் தேதி விருது அறிவிக்கப்படும். விருது ஜனாதிபதியால் வழங்கப்படும். ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் பத்ம விருதுகள் வழங்கும் விழாவின்போது தேசிய ஒற்றுமைக்கான விருதும் வழங்கப்படும்.

எந்த இந்திய தேசிய நிறுவனமோ அல்லது அமைப்போ விருதுக்கான தனிநபரை பரிந்துரை செய்யலாம். தனிநபர்கள் சுயமாகவும் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், பல்வேறு துறை அமைச்சகங்களும் விருதுக்கான நபரை பரிந்துரைக்கலாம். ஒவ்ெவாரு ஆண்டும் விருதுக்கான பெயர்கள் வரவேற்கப்படும். இதற்காக வழங்கப்பட்டுள்ள பிரத்யேக இணைய தளத்தில் ஆன்லைன் மூலமாக விருதுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். சாதி, மதம், இனம், பாலினம், பிறந்த இடம், வயது அல்லது வேலை உள்ளிட்ட எந்த பாகுபாடும் இன்றி அனைத்து குடிமகன்களும் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விருதை தேர்வு செய்வதற்கான குழுவை பிரதமர் அமைப்பார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: