மிரட்டி பணம் பறித்த வழக்கில் சட்ட மாணவி திடீர் கைது : சின்மயானந்தா மீது பாலியல் பலாத்கார புகார் கூறியவர்

ஷாஹஜான்பூர்: உத்தரப் பிரதேசத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த பாஜ  தலைவருமான சுவாமி சின்மயானந்தா மீது பாலியல் பலாத்கார புகார் கூறிய சட்ட மாணவியை, மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் சிறப்பு விசாரணை குழு போலீசார் நேற்று கைது செய்தனர். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பாஜ மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான சின்மயானந்தா (73) மீது சட்டக் கல்லூரி மாணவி(23) ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு கூறினார். அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளியன்று சின்மயானந்தா கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே உடல்நிலை பாதிக்கப்பட்டதால் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுவை கடந்த திங்களன்று ஷாஹஜான்பூர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இதனிடையே சின்மயானந்தா மீது பலாத்கார குற்றச்சாட்டு கூறிய சட்ட மாணவியை, மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் சிறப்பு விசாரணை குழு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். வீட்டில் இருந்த மாணவியை காலை 9.15 மணிக்கு விசாரணை குழு போலீசார் கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் முன்னிலையில் அவரை போலீசார் ஆஜர்படுத்தினர். மாணவியை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். முன்னதாக நேற்று முன்தினம் மாணவியிடம் சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை நடத்தினார்கள். முன்னாள் மத்திய அமைச்சரை மிரட்டி பணம் பறித்த வழக்கில்,  கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக இடைக்கால ஜாமீன் கேட்டு உள்ளூர் நீதிமன்றத்தில் மாணவி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் இன்று விசாரிப்பதாக கூறியிருந்தது. அதற்குள் மாணவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: