இங்கிலாந்து நாடாளுமன்றத்தை முடக்கிய போரிசின் நடவடிக்கை சட்ட விரோதமானது: பிரிட்டன் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

லண்டன்: ‘பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்கிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் நடவடிக்கை சட்ட விரோதமானது,’ என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது தொடர்பான, பிரக்சிட் ஒப்பந்தத்தை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பின்றி நிறைவேற்றுவதற்காக இந்த மாத தொடக்கத்தில் நாடாளுமன்ற கூட்டத்தை 5 வாரங்கள் ரத்து செய்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டார். வரும் அக்டோபர் 31ம் தேதியுடன் பிரிட்டன் வெளியேறுவதற்கான காலக்கெடு முடிய உள்ள நிலையில், நாடாளுமன்ற முடக்கத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி பிரிண்டா ஹெல்லை உள்ளடக்கிய 11 பேர் கொண்ட அமர்வு நேற்று வழங்கிய தீர்ப்பில், ‘பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்கிய பிரதமரின்  நடவடிக்கை சட்ட விரோதமானது. சபை தொடர்ந்து செயல்படலாம்’ என்று உத்தரவிட்டுள்ளது.

‘தீர்ப்பை ஏற்க முடியாது’

அமெரிக்காவில் நடைபெறும் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றுள்ள பிரதமர் போரிஸ், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக அதிருப்தி தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் நேற்று அவர் அளித்த பேட்டியில், ‘உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்க முடியாதது என்றாலும், அதன் தீர்ப்புக்கு மதிப்பளிக்கிறேன்,’’ என்றார்.

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

பிரிட்டன் உச்ச நீதிமன்றம் நேற்று வழங்கிய இந்த தீர்ப்பை தொடர்ந்து, நாடாளுமன்ற கீழ்சபை இன்று கூடுகிறது. இது தொடர்பாக, அந்த அவையின் சபாநாயகர் ஜான் பெர்கோவ் நேற்று அளித்த பேட்டியில், ‘`நாடாளுமன்றம் மீண்டும் நாளை (புதன்கிழமை) கூடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. காலை 11.30 மணியளவில் அவை கூடும்,’’ என்றார்.

Related Stories: