தண்ணீரில் தத்தளித்தபடி மூதாட்டி உடல் அடக்கம் தாழ்த்தப்பட்டோர் மயானம் குறித்து கலெக்டர்கள் விளக்கமளிக்க வேண்டும்: மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: மூதாட்டி உடலை தண்ணீரில் தத்தளித்து எடுத்து சென்று அடக்கம் செய்த விவகாரத்தில், தாழ்த்தப்பட்டோருக்கு உள்ள மயானங்கள் குறித்து விளக்கமளிக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டம், கோடாலிகருப்பூர் அருகே உள்ள வக்காரமாரி கிராம காலனி தெருவில் இருந்து மயானத்திற்கு செல்ல வேண்டும் என்றால், புதிய, பழைய என 2 வாய்க்கால்களை கடந்து செல்ல வேண்டும். வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாத நாட்களில் மக்கள் உடலை சிரமமின்றி எடுத்து சென்று அடக்கம் செய்து விடுவார்கள். ஆனால், தற்போது மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதால், வாய்க்கால்களில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்நிலையில், வக்காரமாரி காலனி தெருவை சேர்ந்த முருகேசன் என்பவரின் மனைவி மாரியம்மாள் (70) உடல்நிலை சரியில்லாமல் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

இதனால் அவரது உடலை மயானத்திற்கு எடுத்து செல்ல வேறு வழியில்லாமல் வாய்க்கால்களில் நிரம்பி ஓடும் நீரில் தத்தளித்தபடி கொண்டு சென்று, அடக்கம் செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்த செய்திகள் நாளிதழ்களில் வெளியானது. இதனை பார்த்த மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி சித்தரஞ்சன் மோகன் தாஸ் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக விசாரணைக்கு எடுத்தார். பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக அரியலூர் மாவட்ட கலெக்டர் 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும். இதேபோல், அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தமிழகம் முழுவதும் எஸ்.சி, எஸ்.டியினருக்கு எவ்வளவு மயானங்கள் உள்ளன. சடலங்களை அடக்கம் செய்ய போதுமான இடம் வழங்கப்பட்டுள்ளதா, இல்லையா, மயானத்திற்கு செல்ல போதுமான சாலை வசதிகள் உள்ளதா என 4 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: