தொலைதூர கல்வி முறையில் முறைகேடு: மதுரை காமராஜர் பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வி முறைகேடுகள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி குழு நடத்திய விசாரணையின் அடிப்படையில் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ராஜராஜன் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்த குற்றசாட்டை தொடர்ந்து, ஓய்விபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அக்பர் அலி தலைமையிலான குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த குழுவானது விசாரணை செய்ததில் தொலைதூர கல்வியில் மாணவர் சேர்க்கையில் முறைகேடு, மற்றும் போலியான மதிப்பு சான்றிதழ் வழங்கி பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக ஓய்வி பெற்ற நீதிபதி அக்பர் அலி குழுவானது பல்கலைக்கழகத்திற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதனடிப்படையில் தொலைதூர கல்வி இயக்குனரகத்தில் பணிபுரியும் கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ராஜராஜன், சூப்பிரண்டு சத்தியமூர்த்தி மற்றும் கார்த்திகை செல்வன் உள்ளிட்ட 3 பேரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு 3 பேரின் சஸ்பெண்டுக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏற்கனவே மதுரை காமராஜர் பல்கலையில் துணை வேந்தராக செல்லத்துரை பதவி வகித்த போது, பல்வேறு துறைகளுக்கு பேராசிரியர் நியமனம் மற்றும் நிர்வாக பிரிவு அலுவலர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பது குறித்தும் அக்பர் அலி தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: