மருத்துவ கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சான்றிதழ்கள் சரிபார்ப்பு

நெல்லை: சென்னையை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததையடுத்து மாநிலம் முழுவதும் முதலாமாண்டு மருத்துவம் பயிலும் மாணவர்களின் ஆவணங்களை  சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த ஆண்டு புதியதாக சேர்ந்த 250 மாணவர்களின் சான்றுகளும் சரிபார்க்கும் பணி கடந்த 3 நாட்கள் நடந்தது. முதல்வர் கண்ணன் ஏற்பாட்டில் துணைமுதல்வர் சாந்தாராம்  தலைமையில் பேராசிரியர்கள் 4 பேர் குழுவினர் மாணவர்களை அழைத்து அவர்களது ஆவணங்களை சரிபார்த்தனர். இதில் சந்தேகங்கள் எழவில்லை என மருத்துவக்கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன. இதேபோல் தூத்துக்குடி அரசு மருத்துவக்  கல்லூரியில் இந்த ஆண்டு சேர்ந்துள்ள 150 மாணவ, மாணவிகளின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் ஆய்வு பணி நடந்தது.

மருத்துவக்கல்லூரி டீன் பாவலன் தலைமையில், கல்லூரி துணை முதல்வர் கலைவாணி உள்ளிட்டவர்கள்  தலைமையிலான குழுவினர் மாணவ, மாணவியரின் சான்றிதழ்களை ஆய்வு செய்தனர். இதில் எந்தவிதமான முறைகேடும் நடக்கவில்லை என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த அறிக்கை மருத்துவக்கல்வி இயக்குநரகத்தில்  ஒப்படைக்கப்படும் என டீன் தெரிவித்தார். மதுரை: மதுரை மருத்துவக்கல்லூரியில் நடந்த ஆய்வு குறிதது முதல்வர் வனிதா கூறுகையில், ‘‘250 பேரில், ஏற்கனவே 210 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு விட்டன. மீதுமுள்ள 40 பேரின் சான்றிதழ்களும் இன்று சரி பார்க்கப்பட்டது.  மாணவர் சேர்க்கையில் எந்த முறைகேடும் நடக்கவில்லை.’ என்றார். சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் 66 மாணவிகள், 34 மாணவர்கள் என 100 பேரின் சான்றிதழ் ஆய்வு செய்யும் பணி நேற்று தொடங்கியது.

Related Stories: