தமிழ் தெரியாதவர்களை சிவில் நீதிபதிகள் தேர்வை எழுத அனுமதிக்கக் கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழ் தெரியாதவர்கள் சிவில் நீதிபதிகள் தேர்வை எழுத அனுமதிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் சிவில் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை, சாட்சியம் உள்ளிட்ட அனைத்தும் தமிழ்  மொழியில் தான் நடக்கும். சிவில் நீதிமன்றங்களில் சொத்துகள் குறித்த வழக்குகள் தான் அதிக  எண்ணிக்கையில் நடைபெறும். இந்த வழக்குகளை தீர்மானிப்பதற்கான முக்கிய ஆதாரங்கள் நிலப்பதிவு  பத்திரங்கள் தான். இவை பெரும்பாலும் தமிழில் தான் இருக்கும். பத்திரங்களில் உள்ள வாசகங்களை அறிந்து கொள்ள தமிழ் மொழி  மட்டும் தெரிந்திருந்தால் போதாது, உள்ளூர் மொழிநடையும் தெரிந்திருக்க வேண்டும். சிவில் வழக்குகளை கையாள்வதில் மொழி சார்ந்து இவ்வளவு சிக்கல்கள் இருக்கும் நிலையில், தமிழ் மொழி அறியாதவர்கள் கூட சிவில் நீதிபதிகள்  பணிக்கான போட்டித் தேர்வுகளை எழுதலாம் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருப்பது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும்.

எப்போதோ எழுதப்பட்ட விதிகளை காட்டி தவறுகள் தொடர்வதை அரசுப் பணியாளர் தேர்வாணையம்  அனுமதிக்கக்கூடாது. விதிகள் எனப்படுபவை காலத்திற்கு ஏற்றவாறு திருத்தப்பட வேண்டும். எனவே, சிவில் நீதிபதிகள் உள்ளிட்ட தமிழக  அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் எந்த பணிகளாக இருந்தாலும் அவற்றில் தமிழர்களை மட்டுமே நியமிக்கும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய விதிகளில் திருத்தங்களைச் செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: