ஆண்டு தோறும் அதிகரிக்கும் தற்கொலைகள்: உலகில் 40 விநாடிக்கு ஒருவர் உயிரை மாய்க்கிறார்கள்

‘‘கடன்தொல்லையால் தற்கொலை, காதல் தோல்வியால் தற்கொலை, கந்துவட்டி கொடுமையால் தற்கொலை, தேர்வில் தோற்றதால் தற்கொலை, ஆசிரியர் திட்டியதால் தற்கொலை, வேலை இல்லாததால் தற்கொலை, அதிகாரிகளின் டார்ச்சரால் தற்கொலை,’’ என்று நித்தமும் பல தற்கொலைகள், பல்வேறு காரணங்களால் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. தனது வாழ்க்கை பயணத்திற்கு தானே முடிவு கட்டிக் கொள்ளும் வேதனையின் உச்சம்தான் தற்கொலை. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ம்தேதி, உலக தற்கொலை தினம் என்ற இலக்கோடு, விழிப்புணர்வு ஏற்படுத்தி இதற்கு தீர்வு காண வேண்டிய இக்கட்டான சூழலில் நாடு சென்று கொண்டிருக்கிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை  படி உலகம் முழுவதும் ஆண்டுக்கு 10 லட்சம் மக்கள் தற்கொலை  செய்துகொள்கின்றனர். 40வினாடிகளுக்கு ஒருவர் தற்கொலை முடிவை  தேர்ந்தெடுக்கிறார். இந்தியாவில் மேற்கு வங்க மாநிலம்தான் தற்கொலை மரணத்தில் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் தற்கொலை விகிதம் 25 சதவீதம் அதிகரித்துள்ளது. தினசரி சராசரியாக 390 பேர் தற்கொலை செய்கின்றனர். தமிழகத்தை பொருத்தவரை தற்கொலை விகிதம் 11.8  சதவீதமாக உள்ளது. இங்கு காதல் தோல்வியால் அதிக தற்கொலைகள் நடக்கிறது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மன அழுத்தம், குற்றஉணர்வு,  உடல் நலக்குறைவு, நிதிச்சிக்கல்கள் உள்ளிட்ட பல காரணங்கள் ஒருவரை  தற்கொலைக்குத் தூண்டுவதாக கருதப்படுகிறது.

17 வயதிலிருந்து 19  வயதுக்குட்பட்டவர்கள்தான் தற்கொலைக்கு அதிக அளவில் பலியாகிறார்கள். சிலர் வறுமை காரணமாக தற்கொலை செய்துகொள்கிறார்கள். சிலர்  தேர்வில் பெரும் வெற்றி பெறுவோம் என எதிர்பார்த்து,  அது நிறைவேறாததால்  தற்கொலை முடிவுக்கு செல்கின்றனர். இதில் தற்கொலை முடிவுக்கு மனஅழுத்தம்  என்பது முக்கிய காரணமாக இருந்தாலும், சமூக வாழ்வியல்  மாற்றமே இதற்கு  அடித்தளமாக இருக்கிறது என்பதும் ஆய்வாளர்களின் கருத்து. முன்பிருந்த மனித வாழ்க்கை முறை, இப்போது   முற்றிலும் மாறிவிட்டது. கூட்டுக் குடும்பங்கள்  உடைந்து சிறு குடும்பங்களாக நிற்கிறது. சக மனிதர்களுடன் நட்பு பாராட்டும் வழக்கம் மாறி,  மின்னணு சாதனங்களை பெரிதும்   நம்பத் தொடங்கிவிட்டோம். அனைத்திற்கும் ஆப்கள்,  எலக்ட்ரானிக் பொருட்களை சார்ந்து, கர்வத்தின் அடிப்படையில், மனங்களை விட்டு விலகி இருக்கிறோம். இதனால் வெற்றி   என்ற ஒன்று மட்டுமே இலக்காக இருக்கிறது. தோல்வியைப் பற்றி நாம் எண்ணி   பார்க்காமல் இருக்கிறோம்.

திடீரென அதனை சந்திக்கும் போது, மனமுடைந்து விரக்தியின் உச்சத்திற்கு செல்கிறோம். இதுவே விபரீதத்திற்கு வித்திடுகிறது. அதே நேரத்தில் பலதரப்பட்ட மக்களிடம்  பேசும்போது எதிர்மறை சம்பவங்களைப் பற்றிய   அனுபவம் கிடைக்கும். இழப்பு என்பதன் அர்த்தம் புரியும். ஆனால் இப்போது   மனிதர்களுடனான தொடர்பு குறைந்தது இழப்பு என்ற ஒன்றின் மீதான புரிதல்   இல்லாமல் போகிறது. எனவே அந்த இழப்பை தாங்க முடியாமல் எடுக்கும் விபரீத முடிவே தற்கொலையாகும். வாழ்வில்  பிரச்னைகள் இல்லாத மனிதர்களே இல்லை. அதை கல்லாக எண்ணி கண்களுக்கு அருகில்  வைத்து பார்க்கும் போது அது  உலகத்தையே மறைத்துவிடும். அதையே சற்று  தள்ளிவைத்து பார்த்தால், அது கடுகு என்பது தெரியும். எனவே பிரச்னைகளை கல்லாக நினைப்பதும், கடுகாக நினைப்பதும் நம் கையில் தான் உள்ளது. இதை மனிதகுலம் முழுமையாக உணர்ந்து கொண்டால், தன்னுயிரை தானே மாய்க்கும் தற்கொலை அவலங்கள் தொடராது என்பது அனுபவ மனிதர்களின் அறிவுரையாக உள்ளது.

சேலம்: பட்டுப்பூச்சிக்கு வாழ்க்கை எட்டு நாள் மட்டுமே... பறந்து வரும் ஈசலுக்கு வாழ்க்கை, ஒரே நாள் தான்... அவை பறப்பதும், சிறகை விரிப்பதும், வாழ்வின் அர்த்தம் சொல்லும் எளிய தத்துவம். ஆனால் பல்லாண்டு வாழ வேண்டிய  மனிதர்களோ, மன உளைச்சலால் ‘தற்கொலை’ என்ற பெயரில் தனக்கு தானே மரண சாசனம் எழுதிக் கொள்வது பரிதாபத்தின் உச்சம். இறைவன் படைத்த உலகில் ஔியும், இருளும், வெயிலும், மழையும், பகலும், இரவும் இயற்கை. அதே போல் வளமும், வறுமையும், நன்மையும், தீமையும், வெற்றியும், தோல்வியும், ஏற்றமும், இறக்கமும் இயற்கையே என்பது இதயத்தில் பதிந்துவிட்டால், முடிவுரைக்கான முற்றுப்புள்ளி மாய்ந்து, மகிழ்வின் தொடக்கத்திற்கான  பிள்ளையார் சுழியே எப்போதும் நிலைத்திருக்கும் என்பது எதார்த்தம்.  

4 விஷயங்கள் முக்கியத் தேவை:

மனிதர்களுக்கு  சுயக்கட்டுபாடு மிக முக்கியமான ஒன்று. இரண்டாவது மற்றவர்களோடு  எந்த  இடர் பாடுகளும் இல்லாமல் பழகுவது. மூன்றாவது வாழ்க்கையின் மீதான  நம்பிக்கை.  நான்காவது சுய மதிப்பீடு. இவையே ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சி  அளிக்கும்.  இதை தவிர்த்து அடுத்தவருக்காக வாழ தொடங்கினால் நாம்  நிம்மதியை இழப்போம்.  இதை ஒருவர் புரிந்து கொண்டாலே தற்கொலை போன்ற எதிர்மறை எண்ணங்களை  கையாளலாம்  என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.  

மனஅழுத்தமே முக்கிய காரணம் - மருத்துவர் தகவல்:

மன  அழுத்தம் காரணமாக 15 முதல் 20   சதவீதம் பேரும், மன விரக்தியால் 10 முதல்  15 சதவீதம் பேரும், மனச்சிதைவு   நோயால் 10 சதவீதம் பேரும், போதை  பழக்கத்தால் 15 சதவீதம் பேரும்  தற்கொலை   செய்து கொள்கின்றனர்.  தீக்குளிப்பது, விஷம் அருந்துவது, தூக்கிடுவது,  நீர்நிலைகளில் குதிப்பது, தண்டவாளத்தில் தலை வைப்பது என்ற ரீதியில்  அதிகளவில் தற்கொலைகள் நடக்கிறது. தற்கொலைக்கு முயல்வோரை தடுக்க எண்ணற்ற  வழிகள்  இருக்கிறது.  இந்த எண்ணம் தோன்றும் போது, பேசுவதற்கு  கூட ஆட்கள்  இல்லாததால் தான், விபரீத முடிவை எடுத்துவிடுகின்றனர் என்கிறார் மனநல மருத்துவர் சங்கர்.

வறுமையால் 1.7 சதவீதம்:

குடும்ப சூழ்நிலை, வறுமை, காதல் தோல்வி, மனஅழுத்தம் உள்ளிட்ட காரணங்களினால் கடந்த 5ஆண்டுகளில் நாடு முழுவதும்  1.35 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் குடும்ப சூழ்நிலை, நோயினால் 24.3 சதவீதம் பேர் தற்கொலை செய்துள்ளனர். வறுமையினால் 1.7 சதவீதம் பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று கூறுகிறது மத்திய அரசின் புள்ளிவிபரம்.

காதல் தோல்வியால் 15 சதவீத விபரீதம்:

இந்தியாவில் காதல் தோல்வியால் இறப்பவர்களில் 15 சதவீதம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இதில் தமிழகத்தில் கடந்தாண்டில் (2018) மட்டும் 588  பேர் காதல் தோல்வியால் இறந்துள்ளனர்.  மேற்கு மாவட்டங்களில் ஆண், பெண் தற்கொலை  விகிதத்தில் 64.8 சதவீதம் ஆண்கள். இதில் 15 வயது முதல் 29 வயதுக்குட்பட்டவர்களின் தற்கொலை விகிதம் 35.4  சதவீதம். காதல் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்கள் எண்ணிக்கை 15 சதவீதம் என்று போலீஸ் புள்ளி விவரம் கூறுகிறது.

கல்லூரி மாணவர்களை பலியாக்கும் ‘டார்ச்சர்’:

தேசிய அளவிலான கணக்கெடுப்பில், ஒரு லட்சம் தற்கொலைகளில் 11,200 பேர் கல்லூரி மாணவர்கள் என்று தற்கொலை குறித்து ஆய்வு நடத்தி வரும் சூசைட் ஆர்க் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. வளாகத்தேர்வில் செலக்ட் ஆக வேண்டும் என்று பெற்றோரும், ஆசிரியர்களும் கொடுக்கும் அதிகப்படியான அழுத்தம், சராசரி மாணவரை சென்டம் எடுக்கச் சொல்லி நிர்வாகம் கொடுக்கும் அழுத்தம், பெயிலாகும் மாணவர்களிடம் அபராத கட்டணம் வசூலிப்பது, ஆங்கிலம் பேசத் தெரியாதவர்களை இழிவாக நடத்துவது போன்றவை மாணவர்கள் தற்கொலைக்கு காரணங்கள் என்றும் சூசைட் ஆர்க் தகவல் வெளியிட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் மனநல ஆலோசகர்கள்:

தமிழகத்தில்  அனைத்துப் பள்ளிகளிலும்  மாணவ, மாணவிகளின் உளவியல் பிரச்னைகளுக்குத்  தீர்வு காணும் வகையில் மூத்த  ஆசிரியர்கள், ஆசிரியைகள் தலைமையில் உளவியல்  ஆலோசனைக் குழுக்கள் அமைக்க  பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதே  நேரத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க  அனைத்து பள்ளி,  கல்லூரிகளிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டியது அவசர  அவசியம். மத்திய அரசு தனது பட்ஜெட்டில் ஆண்டுக்கு 0.06% தொகையை,  மாணவர்களின் மனநலனைப் பாதுகாக்கும் திட்டங்களில் செயல்படுத்துகிறது. இதை  அதிகப்படுத்தினால் வருங்காலங்களில் மாணவர்களின் தற்கொலைகள் குறையும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

போலீசுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தேவை:

தமிழகத்தில் சமீபகாலமாக போலீசார் தற்கொலை செய்வதும் அதிகரித்து வருகிறது. திருச்செங்கோடு டிஎஸ்பியாக இருந்த விஷ்ணுபிரியா மற்றும் பல மாவட்டங்களில் ேபாலீசார் தற்கொலை செய்து கொண்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக போலீசாருக்கு மனஅழுத்தத்தை தடுக்க சிறப்பு வகுப்புகள்  நடத்தப்படுகிறது. இம்முகாமின்  நிறைவு நாளில், தற்கொலை எண்ணங்கள் குறித்த கேள்விகளும் கேட்கப்படுகிறது.  அப்போது, தனக்கு தற்கொலை எண்ணம் தோன்றியுள்ளது என குறிப்பிடும் போலீசார்  மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு தனியாக மருத்துவமனையில் மனநல  மருத்துவரின் சிகிச்சை அளிக்கப்படுகிறது.  இதேபோல்,  அனைத்து துறை ஊழியர்களுக்கும் மனஅழுத்த தடுப்பு முகாம் நடத்த வேண்டும் என்கின்றனர் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள்.  

பிள்ளைகளிடம் மனம்விட்டு பேசுங்க...  டிஐஜி அறிவுறுத்தல்

சேலம்  சரக டிஐஜி பிரதீப்குமார் கூறுகையில், “தற்கொலைக்கு முக்கிய காரணமாக மன  உளைச்சல், நிறைவேறாத ஆசை,  விரக்தி போன்றவை இருக்கிறது. வீட்டில்,  பிள்ளைகளின் செயல்பாட்டில் மாறுபாடு தென்பட்டாலோ, எதுவும் பேசாமல் சற்று  ஒதுங்கி சென்றாலோ உடனடியாக பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் கவனிக்க  வேண்டும். அதிலும் பிள்ளைகளிடம் பெற்றோர் மனம்விட்டு பேச வேண்டும்.  பேச்சில் தான், அவர்களின் எண்ணத்தை மாற்ற முடியும். அதேவேளையில், மிக  கடுமையான மனஉளைச்சலில் இருந்தாலோ, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுவிட்டாலோ  உடனடியாக மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொருவரும், தங்களுக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால், அதை விட பெரியது கிடைக்க இருக்கிறது என எண்ணி  வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும்,’’ என்றார்.

கிருஷ்ணகிரியில் அதிகம்:

சேலம்  சரகத்தில் பல்வேறு காரணங்களுக்காக தங்களின் உயிரை மாய்த்துக் கொள்ளும்  சம்பவங்கள் தினமும் நடந்து வருகிறது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  தான், மிக அதிகளவு தற்கொலை சம்பவங்கள் நடக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த  எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. அதனை கட்டுப்படுத்த போலீசார் மற்றும்  தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் தொடர் விழிப்புணர்வை மேற்கொண்டுள்ளனர்.  நடப்பாண்டில் 9 மாதத்தில் 290 பேர் உயிரை

மாய்த்துள்ளனர். சரகத்தை பொறுத்தவரை சேலம் மாவட்டத்தில் தற்கொலை எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

மனநிலையை மாற்ற விளையாட்டு அவசியம்:

எந்தக் குழந்தை விளையாட்டு, உடற்பயிற்சியில் ஈடுபடுகிறதோ அக்குழந்தைக்குதான் எண்டோமார்ப் என்ற ஹார்மோன் அதிகம் சுரக்கும். இதனால் குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் மகிழ்ச்சியாக இருப்பர். பிரச்னைகள் வந்தாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். பள்ளிகளிலேயே உணர்வுகளைக் கையாளவும், பிரச்னைகளைக் கையாளவும் கற்றுத் தர வேண்டும்.  விளையாட்டு மீதான ஆர்வம் கொண்டவர்கள் இந்தப் போட்டியில் தோற்றால் அடுத்த போட்டியில் வெற்றி பெறலாம் என்று பாசிட்டிவாக எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் மன அழுத்தத்துக்கு ஆளாவதில்லை. விளையாட்டுகளில் ஈடுபடுவது உணர்வுகளை சமநிலையில் வைத்திருக்க உதவும். மாணவர்கள் ஏதேனும் ஒரு விளையாட்டில் ஆர்வம் செலுத்துவது ஆரோக்கியமானது என்கிறார் விளையாட்டு வீரர் விஸ்வநாத்.   

‘நீட்’டிலும் மறு தேர்வு என்றால் மாற்றம் வரும்: - மக்கள் இணையம் நம்பிக்கை

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் நீட்தேர்வால் பாதிக்கப்பட்ட அனிதா உட்பட பல மாணவ, மாணவியர் தற்கொலை ெசய்து உயிரை மாய்த்துக் கொண்டனர். சில ஆண்டுகளுக்கு முன்பு 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வில் தோல்வி என்றால் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால், ஒரு மாதத்துக்குள் தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் மறு தேர்வு எழுதலாம் என்று தமிழக அரசு அறிவித்த பிறகு தற்கொலைகள் குறைந்தன. நீட் தேர்விலும் மறுதேர்வு வைத்தால் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். கல்வி முறையில் பிரச்னை இருக்கிறது என்று மட்டும் பிரதானமாக சொல்லிக் கொண்டிருக்காமல் சமூகம் மாணவர்கள் மீது வைக்கும் அதீத அழுத்தத்தை மாற்றி அமைப்பதே சிறந்தது என்கிறார் மக்கள் இணையம் அமைப்பின் நிர்வாகி ராமு.

Related Stories: