ரயில் நிலையங்களுக்கு குண்டு மிரட்டல் அரிசி கடத்தல் கும்பல் தலைவனிடம் விசாரணை

சேலம்:சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்திற்கு நேற்று முன்தினம், மர்ம கடிதம் ஒன்று வந்தது. மணிவேல் என்ற பெயரில் எழுதப்பட்டிருந்த அக்கடிதத்தில், ‘‘நான் ஏழ்மையான நிலையில் உள்ளேன். எனக்கு மத்திய அரசு உதவ வேண்டும்.  குறிப்பாக எனக்கு ரயில்வே துறையில் வேலை வழங்க வேண்டும். இதனை நிறைவேற்றாவிட்டால், சேலம், ஈரோடு, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன்களை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும். கோவை  இன்டர்சிட்டி, வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ், பழனி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 6 ரயில்களிலும் குண்டு வெடிக்கும்,’’ என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதத்தின் இறுதியில் ஒரு ஆம்னி வேன் வண்டி எண்ணை குறிப்பிட்டு, அந்த வண்டியில் தான் வெடிகுண்டுகளை நிரப்பி வந்து வெடிக்கச் செய்வோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக, சேலம் ரயில்வே  போலீசில், கோட்ட நிர்வாகம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் விசாரணையை தொடங்கினர்.

சேலம் ரயில்வே ஸ்டேஷனில் தீவிர ேசாதனை நடத்தினர். இதேபோல், ஈரோடு, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.  இதனிடையே கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ஆம்னி வேன் எண்ணை கொண்டு விசாரித்ததில், அந்த வண்டி நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை சேர்ந்த பிரபல ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் தலைவன் மணிவேல் (50) என்பவருக்கு  சொந்தமானது எனத் தெரியவந்தது.  அவரை நேற்று அதிகாலையில் போலீசார், மடக்கி பிடித்தனர். பின்னர், சேலம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வந்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தன்னை பழிவாங்க யாராவது  செய்திருக்கலாம் என போலீசில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: