வருமானவரி தடகளம்: சுமதி, ரஞ்சிதா அசத்தல்

சென்னை: வணிகவரித்துறை விளையாட்டு மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் மாநில அளவிலான தடகள போட்டி நேற்று நடந்தது. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து வணிகவரித்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். பெண்கள் பிரிவில் 40 வயதுக்குட்பட்டவர்கள், 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்று 2 பிரிவுகளாகவும்,   ஆண்கள் பிரிவில் 45 வயதுக்குட்பட்டவர்கள்,  45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று 2 பிரிவுகளாகவும் போட்டிகள் நடைபெற்றன. பெண்கள் பிரிவில் 40 வயதுக்குட்பட்டோருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சென்னையைச் சேர்ந்த சுமதி தங்கப்பதக்கமும், கார்த்திகேயானி வெள்ளிப்பதக்கமும், சேலத்தை சேர்ந்த ஜெயா வெண்கல பதக்கமும் வென்றனர். 400 மீட்டர் மற்றும் 800 மீட்டர் தொடர் ஓட்டங்களில் சென்னையை சேர்ந்த சரஸ்வதி தங்கp பதக்கம் வென்றார்.  

குண்டு எறிதல் போட்டியில் சென்னையை சேர்ந்த தமிழரசி தங்கம் வென்றார். வட்டு எறிதல் போட்டியில் சேலத்தை சேர்ந்த சித்ரா, சென்னையை சேர்ந்த தமிழரசி, வேலூரை சேர்ந்த சிந்தாமணி ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.   40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் கோவை ரஞ்சிதா, சென்னை ராஜேஸ்வரி, திருநெல்வேலி ஐஸ்வர்யா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். 400 மீட்டர் ஓட்டத்தில் சென்னையை சேர்ந்த ராஜேஸ்வரி, நிவேதா, கோவையை சேர்ந்த ஜெயலட்சுமி ஆகியோர் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றனர். குண்டு எறிதல் போட்டியில் கோவையை சேர்ந்த சிந்துஜா, திருச்சியை சேர்ந்த புவனேஸ்வரி, சென்னையை சேர்ந்த கஜேந்திரி, பூமா ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். நீளம் தாண்டுதல் போட்டியில் ரஞ்சிதா தங்கம் வென்றார்.

ஆண்கள் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் சேலம் இளஞ்செழியன் தங்கம் வென்றார். சென்னையை சேர்ந்த சத்திய திலகம் வெள்ளியும், சேலத்தை சேர்ந்த வேடியப்பன் வெண்கலமும் வென்றனர். மேலும் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் சேலம் தங்கராஜ், திருநெல்வேலி பொன்னுசாமி, சேலம் நசீர் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு வணிகவரித்துறை புலனாய்வுப் பிரிவு கூடுதல் ஆணையர் லட்சுமி பிரியா பதக்கங்களையும் பரிசு கோப்பையையும் வழங்கினார்.

Related Stories: