தனியாருக்கு இணையாக அரசு பள்ளியை ஸ்மார்ட் பள்ளியாக மாற்ற சுவரில் கலைவண்ணம்: தலைமை ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிகிறது

க.பரமத்தி: கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் மொஞ்சனூர் ஊராட்சி தொட்டியபட்டியில் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக மூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது முயற்சியால் பள்ளிச் சுவர்களில் வண்ண மீன்கள், சோட்டா பீம், மழைநீர் சேமிப்பு, யானை, ஒட்டகச்சிவிங்கி, சி.எப்.எல்., பல்புகளை பயன்படுத்துதல், தேசத் தலைவர்கள், இதயம், அவ்வையார் போன்ற படங்களை மாணவர்கள் ரசிக்கும் வண்ணம் வண்ண ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் மூர்த்தி முயற்சியால் பள்ளியில் கம்ப்யூட்டர் வசதியுடன் அழகான அரங்க அமைப்பு போல ஸ்மார்ட் வகுப்பறைகளும் அமைந்து உள்ளன. இதற்காக தலைமை ஆசிரியர் மூர்த்திக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

இது குறித்து தலைமை ஆசிரியர் மூர்த்தி கூறியதாவது: இப்பள்ளியை ஒரு ஸ்மார்ட் பள்ளியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். பட்டாம் பூச்சிகள் இயக்கத்தின் தலைவர் ராஜசேகர் தலைமையில் 10 தன்னார்வலர்களால், மாணவர்களுக்கு தேவையான வகையில், சுவரோவியங்கள் தேர்ந்தெடுத்து பள்ளி மாணவர்கள் ரசிக்கும் வண்ணம் உயிரெழுத்துகள், ஒலிக்குறி சார்ந்த பாடங்களும் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. அத்துடன் அறிவியல், கணித பாடத்தை சிறப்பாக பயிலவும், மாணவர்களின் ஐகியூ வளர்ச்சியை இலக்காக கொண்டும் இந்த சுவரோவியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் அன்றாடம் சுவர்களை கடந்து செல்லும் போது, ஓவியங்கள் வாயிலாக கற்றுக்கொள்வதால், குறிப்பிட்ட கருத்துகள் அவர்களது மனதில் ஆழமாக பதிந்து விடும். இதனால் அவர்களின் ஒட்டுமொத்த அறிவுத்திறன் மேம்படும் என்றார்.

Related Stories: