மதுரை நகரில் அதிவேக ஆட்டோக்களால் அதிகரிக்கும் விபத்து

மதுரை: மதுரை நகரில் அதிவேக ஷேர்ஆட்டோக்களால் விபத்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். மதுரை நகரில் மாட்டுத்தாவணி, பெரியார் பஸ் ஸ்டாண்ட், புதூர், ஆரப்பாளையம், பழங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் ஷேர்ஆட்டோக்கள் அதிக ஆட்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. பழங்காநத்தம்-திருப்பரங்குன்றம் சாலையில் நேற்று காலை போட்டி போட்டுக்கொண்டு ஷேர்ஆட்டோக்கள் சென்றன. அப்போது, அதே திசையில் வந்த டூவீலர் மீது மோதியதில் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் வந்த தனக்கன்குளத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது மனைவி, மகன் கவிஸ்வரன் ஆகியோர் படுகாயமடைந்தனர். 3 நபர்களுக்கு மேல் ஏற்றி கொண்டு அதிவேகமாக செல்லும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஜெய்ஹிந்த்புரம் முத்து கூறுகையில், ‘ஷேர் ஆட்டோ டிரைவர்கள் விதிமுறைகளை மதிப்பதில்லை. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வாகனத்தை திருப்புவது, தவறான திசையில் செல்வது, ஆட்களை அளவுக்கு அதிகமாக ஏற்றுவது என விதிக்கு புறம்பாக செயல்படுகின்றனர். மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் நுழையும் பாதையில் வெளியே வருவதும், வெளியே வரும்பாதையில் ஆட்டோ டிரைவர்கள் செல்வதால், பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள், உயிரை கையில் பிடித்துக்கொண்டு செல்ல வேண்டியது உள்ளது. மது, கஞ்சா அருந்திவிட்டு ஆட்டோ ஓட்டுபவர்களின் லைசென்சை ரத்து செய்து, ஆட்டோக்களை பறிமுதல் செய்ய வேண்டும்’ என்றார்.

Related Stories: