வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாகவும், வெப்பசலனத்தாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, சிவகங்கை, திருவண்ணாமலை, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் திண்டுக்கல்லில் தலா 6 செ.மீ. மழையும், சேலம் மேட்டூரில் 4 செ.மீ மழையும், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் கனமழை காரணமாக மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

Related Stories: